பெட்ரோல், டீசல் விலை 15வது நாளாக உயர்வு..

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 15வது நாளாக உயர்ந்து வருகிறது.காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, பெட்ரோல், டீசல் விலையில் ஒரு ரூபாய் உயர்ந்த போது கூட, பாஜகவினர் பெரும் போராட்டங்களை நடத்தினார்கள். அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் காங்கிரசைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்கள்.

ஆனால், கடந்த 2014ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல், டீசல் விலைகளை, காங்கிரஸ் ஆட்சியை விடத் தாறுமாறாக உயர்த்தி வருகின்றனர். 2014ம் ஆண்டில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் 108 டாலராக விற்றது. அப்போது இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.41 ஆக இருந்தது. அதற்குப் பிறகு, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து கொண்டே வந்து, தற்போது பேரல் 40 டாலராக உள்ளது. இந்த விலைக்கேற்ப இந்தியாவில் விலையை நிர்ணயித்தால், பெட்ரோல் லிட்டர் ரூ.35க்கு விற்கப்பட வேண்டும். ஆனால், மோடி அரசு அந்த விலை சரிவுகளைக் கலால் வரியாக உயர்த்திக் கொண்டே வந்திருக்கிறது.

இதனால், உலக அளவில் பெட்ரோல், டீசலுக்கு வரி விதிப்பதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.இன்று 15வது நாளாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. கொரோனா ஊரடங்கால் வாகனங்கள் பெருமளவில் இயங்காததால், மக்களும், எதிர்க்கட்சிகளும் விலை உயர்வை எதிர்த்து போராடவும் இல்லை.இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.82.87, டெல்லியில் ரூ.78.58, மும்பையில் ரூ.85.70, கொல்கத்தாவில் ரூ.80.62 ஆக உள்ளது.டீசல் விலை சென்னையில் ஒரு லிட்டர் ரூ.75.29, டெல்லியில் ரூ.77.67, மும்பையில் ரூ.76.11, கொல்கத்தாவில் ரூ.73,04 ஆக உள்ளது. வாழ்க பாஜக. வளர்க பிரதமரின் புகழ்!

More News >>