வளைய சூரியகிரகணம் காலையில் தொடங்கியது.. மாலை 3 மணிக்கு முடியும்..

இன்று காலை 9.15 சூரியகிரகணம் நிகழத் தொடங்கியது. ஆரம்பத்தில் காஷ்மீர், டெல்லி பகுதிகளில் நன்றாகத் தெரிந்தது.இன்றைய சூரிய கிரகணத்தைக் கங்கண சூரியகிரகணம் அல்லது நெருப்பு வளையச் சூரிய கிரகணம் என்கிறார்கள். காலை 9.15 மணிக்குத் தொடங்கி, மாலை 3.04 மணிக்கு இந்த சூரியகிரகணம் நிறைவடைகிறது. இது ஆசியா, ஆப்ரிக்கா, பசிபிக் பிராந்தியங்களிலும், ஆஸ்திரேலியா ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் தெரியும் என்று வானவியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாகக் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்குத் தடை விதிக்கப்பட்டு, பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சூரிய கிரகணத்தை முன்னிட்டு கோயில்களின் கருவறை நடை சாத்தப்பட்டு, காலை பூஜைகளும் ரத்து செய்யப்பட்டன. கிரகணம் முடிந்ததும் நடை திறக்கப்பட்டு, கோயில் பிரகாரங்கள் அனைத்தும் சுத்தம் செய்த பின்பு வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்று அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.

சூரிய கிரகணம் குறித்து, சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தின் இயக்குனர் சவுந்திரராஜ பெருமாள் கூறியதாவது:சூரியனைவிட மிகவும் சிறிய கோள் சந்திரன். ஆனாலும், அது பூமிக்கு அருகே இருப்பதால் பெரியதாகத் தெரிகிறது. இதனால் தான், முழு சூரிய கிரகணத்தின் போது சூரியனைச் சந்திரன்(நிலா) முழுமையாக மறைப்பதாகத் தெரிகிறது.சூரியனில் இருந்து வெகு தொலைவில் சந்திரன் உள்ள போது, அது சூரியனின் தோற்றத்தை விடச் சிறியதாக இருக்கும். அப்போது கிரகணம் நேர்ந்தால் சூரியனைச் சந்திரனால் முழுமையாக மறைக்க இயலாது. ஒரு வளையம் போலச் சூரியனின் வெளி விளிம்பு மட்டும், கிரகணத்தின் போது வெளியே தெரியும். அதனால்தான், இதை கங்கண சூரியகிரகணம் அல்லது வளையச் சூரியகிரகணம் என்று சொல்கிறோம். இது இந்தியாவில் ராஜஸ்தான், அரியானா, உத்தரகாண்ட் மாநிலங்களில் நன்கு தெரியும். தமிழகத்தில் சென்னை, வேலூர், கோவை, திருச்சி, மதுரை, கன்னியாகுமரி பகுதிகளில் தெரியும்.

சென்னையில் காலை 10.22 மணிக்கு தொடங்கி பகல் 1.41 மணி வரை தெரியும். அதிகபட்ச கிரகணம் பகல் 11.58 மணிக்குத் தெரியும். வெறும் கண்ணால் சூரியனை நேரடியாகப் பார்க்கக் கூடாது. அது கண்களைப் பாதிக்கும். இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கண்ணாடிகளைப் பயன்படுத்தலாம். ஊரடங்கு காரணமாக இந்த முறை பிர்லா கோளரங்கத்தில் இருந்து கிரகணத்தைப் பார்க்க ஏற்பாடு செய்யப்படவில்லை.இவ்வாறு சவுந்திரராஜ பெருமாள் கூறினார்.

More News >>