சென்னையில் கொரோனா தனிமை முகாம்களுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு
சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கொரோனா தனிமை மையங்களை அமைப்பதற்காக ரூ.16 கோடியைத் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.தமிழகத்தில் இது வரை 59,377 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இதில் 32,754 பேர் குணம் அடைந்துள்ளனர். மற்றவர்கள் வீடுகளிலும், தனிமைப்படுத்தும் மையங்களிலும் 14 நாள்களுக்கு வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தனிமைப்படுத்தும் மையங்களில் அவர்களுக்கு உணவு மற்றும் இதர வசதி செய்து தரவும், பிறமாநில தொழிலாளர்களுக்கான செலவுகளுக்காகவும் நிதி ஒதுக்குமாறு வருவாய் நிர்வாக ஆணையருக்கு, திருப்பூர், செங்கல்பட்டு, மதுரை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டக் கலெக்டர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் கோரிக்கை அனுப்பியிருந்தனர்.
இதையடுத்து, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காகத் திருப்பூர், செங்கல்பட்டு, மதுரை, ராணிப்பேட்டை மற்றும் சென்னைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, திருப்பூருக்கு ரூ.3 கோடியே 87 லட்சமும், செங்கல்பட்டுக்கு ரூ.1 கோடியே 10 லட்சத்து 64 ஆயிரத்து 218, மதுரைக்கு ரூ.93 லட்சத்து 89 ஆயிரம், ராணிப்பேட்டைக்கு ரூ.75 லட்சமும் மற்றும் சென்னை மாநகராட்சிக்கு ரூ.10 கோடி என மொத்தம் ரூ.16 கோடியே 66 லட்சத்து 53 ஆயிரத்து 218 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் நிவாரணத் துறை ஆணையர் அதுல்யமிஸ்ரா இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.