பிரதமரின் பேச்சுகள் நாட்டின் பாதுகாப்பில் விளைவுகளை ஏற்படுத்தும்.. மன்மோகன்சிங் எச்சரிக்கை..

சீனா ஊடுருவல் விவகாரத்தில் பிரதமரின் வார்த்தைகள் நாட்டின் பாதுகாப்பில் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பிரதமர் உணர வேண்டும் என்று மன்மோகன்சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:சீனா சட்டவிரோதமாக இந்தியாவின் கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் பங்கோங் ஏரி பகுதிகளில், கடந்த ஏப்ரல் முதல் பல ஊடுருவல்களை மேற்கொண்டு, அவற்றுக்கு உரிமை கோர முயற்சிக்கிறது. இந்த அச்சுறுத்தல்களால் நாம் உருக்குலைந்து விட மாட்டோம். நாம் அதற்குத் தகுந்த பதிலடி கொடுக்க முடியும். அதேசமயம், பிராந்திய ஒருமைப்பாட்டைச் சமரசம் செய்ய அனுமதிக்க முடியாது.

கர்னர் சந்தோஷ்பாடு மற்றும் வீரர்கள் 20 பேர் கடந்த 15-16ம் தேதிகளில் தங்கள் இன்னுயிரைத் தந்து இந்த தேசத்தைப் பாதுகாத்துள்ளனர். அவர்கள் தங்கள் கடமையைத் திறம்படச் செய்து, முழு தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்களின் தியாகம் வீண் போகக் கூடாது. இந்த தருணத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்படுவோம். இப்போது அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள், வருங்கால தலைமுறையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். ஜனநாயகத்தில் இந்த பொறுப்பு நமது பிரதமருக்கு உள்ளது.

பிரதமரின் வார்த்தைகள் மற்றும் அறிவிப்புகள், நாட்டின் பாதுகாப்பு மற்றும் எல்லைகளைக் காப்பதில் முக்கிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பிரதமர் உணர வேண்டும்.நமது பிரதமரின் வார்த்தைகள், சீனா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அமைந்து விடக் கூடாது. இந்த தருணத்தில் மக்களுக்குத் தகவல் அளிக்காமல் இருப்பது, சாணக்கியத்தனமோ, திடமான தலைமையின் அழகாகவோ இருக்காது. நாம் எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்க வேண்டும்.இவ்வாறு மன்மோகன்சிங் கூறியுள்ளார்.

More News >>