கொரோனா பரவலை தடுக்க இன்று நள்ளிரவு முதல் மதுரையில் ஊரடங்கு..

மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதைத் தடுப்பதற்காக இன்று நள்ளிரவு 12 மணி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று காலை முதல் கடைகளில் கூட்டம் காணப்படுகிறது.தமிழகத்தில் 62 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. சென்னையில் 42 ஆயிரம் பேருக்கும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கும் கொரோனா பரவியிருக்கிறது. இந்நிலையில், மதுரையிலும் 800க்கும் அதிகமானோருக்கு நோய்த் தொற்று பரவி விட்டது.

இதையடுத்து, மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. கொரோனா பரவும் சங்கிலியை உடைப்பதோடு, தொற்றைக் கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்வது, தனிமைப்படுத்துவது போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த இம்முடிவு எடுக்கப்பட்டது.

இதன்படி, இன்று(ஜூன்24) நள்ளிரவு 12 மணியில் இருந்து 30-ம் தேதி நள்ளிரவு 12 மணிவரை 7 நாட்களுக்கு அந்தப் பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த காலத்தில் சில அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்படும். மேலும், 27-ம் தேதி நள்ளிரவு 12 மணியில் இருந்து 29-ம் தேதி காலை 6 மணிவரை (28-ம் தேதி ஞாயிறு முழுவதும்) எந்தவொரு தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். பால் விநியோகம், மருத்துவமனை, அதற்கான வாகனங்கள், மருந்துக் கடை, மருத்துவ அவசர வாகனங்கள் ஆகியவை மட்டும் அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இன்று பல கடைகளில் மக்கள் கூட்டம் கூடியது. குறிப்பாக, டாஸ்மாக் கடைகளிலும், மதுபானங்கள் மற்றும் இதரப் பொருட்கள் விற்கும் ராணுவ கேண்டீன்களிலும் கூட கூட்டம் காணப்பட்டது.

More News >>