மோதல் நடக்கும் போது பிரதமர் மோடியை சீனா ஏன் பாராட்டுகிறது? ராகுல்காந்தி கேள்வி

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் நடக்கும் போது, பிரதமர் மோடியைச் சீனா ஏன் பாராட்டுகிறது? என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவப் படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதிலடியில் சீன தரப்பில் 43 பேர் பலியானதாகத் தகவல் வெளியானது. ஆனால், அது உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில், சீனா திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தியிருக்கிறது. அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என்று மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் ஸ்ரீபாட் நாயக் கூறியிருந்தார். இந்த செய்தியை மேற்கோள் காட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு போட்டார். அதில், இப்போது தெள்ளத் தெளிவாகத் தெரிந்து விட்டது. 1. கல்வானில் சீனாவின் தாக்குதல் திட்டமிட்ட தாக்குதல். 2. மத்திய அரசு ஆழ்ந்த உறக்கத்திலிருந்துள்ளது. பிரச்சனைகளை மறுத்து வந்துள்ளது. 3. அதற்கான விலையாக நமது ராணுவ வீரர்களை இழந்துள்ளோம் என்று கூறினார்.

இதன்பின், சீன ஊடுருவல் விவகாரத்தில் ராகுல்காந்தி தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்துப் பல ட்விட்களை பதிவு செய்தார். கடைசியாக, ஜப்பான் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான மோடியைச் சீனா பாராட்டுகிறது என்ற செய்தியை மேற்கோள் காட்டி ஒரு பதிவு போட்டிருக்கிறார்.அதில் ராகுல்காந்தி, சீன ஊடுருவலுக்கு எதிராக நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து நிற்கிறோம். சீனா நமது எல்லைக்குள் ஊடுருவி நிலத்தைக் கைப்பற்றியிருக்கிறதா? சீனா நமது வீரர்களைக் கொன்றுள்ளது. நமது நிலத்தைப் பிடித்துள்ளது. ஆனால், இந்த தருணத்தில் சீனா ஏன் பிரதமர் மோடியைப் பாராட்டுகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

More News >>