போலீஸ் லாக்கப்பில் தந்தை, மகன் மர்மச்சாவு.. சாத்தான் குளத்தில் பதற்றம்

சாத்தான் குளம் போலீஸ் ஸ்டேஷனில் தந்தையும், மகனும் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். போலீஸ் தாக்குதலில் இவர்கள் மரணம் அடைந்ததாகக் கூறி, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் (31). இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்திருக்கிறார். இது தொடர்பாக விசாரிப்பதற்காக பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜையும் போலீஸார், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று உள்ளனர். காவல் நிலையத்தில் பென்னிக்ஸ் முன்னிலையில் அவரது தந்தை ஜெயராஜை போலீசார் அடித்துள்ளனர்.

இதைத் தட்டி கேட்டதால், பென்னிக்ஸையும் கட்டி வைத்து அடித்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்து கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். சிறையில் பென்னிக்ஸை சந்தித்த அவரது நண்பர்களிடம் போலீசார் தாக்கியதில் தனது ஆசன வாயிலிருந்து இரத்தம் வந்து கொண்டே உள்ளதாக பென்னிக்ஸ் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் சிறையில் அவருக்கு நேற்றிரவு 7.30 மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறி, சிறைக் காவலர்கள் அவரை பின்னால் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். கடையடைப்பு தொடர்பாக முதலில் பென்னிக்சின் தந்தையை போலீசார் அழைத்துச் சென்று அடித்ததாகவும், காவல் நிலையம் சென்று அதுகுறித்து வாக்குவாதம் செய்ததால் பென்னிக்சை போலீசார் கடுமையாகத் தாக்கியதாகவும், அதன் பின்பே கோவில்பட்டி சிறைச்சாலைக்குக் கொண்டு சென்றதாகவும் அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.

மேலும், பென்னிக்ஸ் மர்ம மரணத்துக்கு நீதி கேட்டு இன்று சாத்தான்குளத்தில் வியாபாரிகள் கடையடைப்பு அறிவித்துள்ளனர். இதற்கிடையே, பென்னிக்ஸ் தந்தை ஜெயராஜுக்குக் காய்ச்சல் இருந்ததாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரும் இன்று காலை மரணம் அடைந்தார்.இந்நிலையில், தந்தை மகன் மர்ம மரணத்தைக் கண்டித்து சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதியில் பொது மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம், பரபரப்பு நிலவி வருகிறது. இருவரது உடல் பரிசோதனையை விடியோ பதிவு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More News >>