தமிழகத்தில் 65 ஆயிரம் பேருக்கு கொரோனா.. சென்னையில் 44 ஆயிரம் பேருக்கு பாதிப்பு..

தமிழகத்தில் இது வரை 64,603 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு 44 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.இந்தியாவில் 90 நாட்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டும், கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. நாட்டிலேயே மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகத் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது.

சென்னையில் இருந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும் கொரோனா வேகமாகப் பரவியது. இப்போது மற்ற மாவட்டங்களுக்கும் சென்னையில் இருந்து சென்றவர்கள் மூலமாக கொரோனா பரவி வருகிறது.தமிழகம் முழுவதும் நேற்று(ஜூன்23) ஒரே நாளில் 2516 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், வெளிநாடுகளில் இருந்து வந்த 10 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 28 பேரும் அடக்கம்.

தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 64,603 ஆக அதிகரித்துள்ளது. இதில், நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 1227 பேரையும் சேர்த்து 35,033 பேர் குணம் அடைந்துள்ளனர்.சென்னையில் நேற்று 1380 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 44,205 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டில் நேற்று 146 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்துப் பாதிப்பு எண்ணிக்கை 4030 ஆக உள்ளது. இதே போல், திருவள்ளூரில் நேற்று 156 பேருக்குத் தொற்று உறுதியான நிலையில் மொத்தம் 2826 பேருக்கும், காஞ்சிபுரத்தில் நேற்று 59 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அம்மாவட்டத்தில் 1286 பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது.

தற்போது கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு 800ஐ தாண்டி விட்டது. மொத்தத்தில் 14 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டியிருக்கிறது.சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால், மக்கள் அதிகமான பீதியில் உள்ளனர். இதனால், சென்னையை விட்டு வெளியேற இ-பாஸ் கேட்டு 34 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.ஏற்கனவே சென்னையில் கொரோனா பாதித்தவர்களும் தங்கள் மாவட்டங்களுக்குச் சென்றதில் கொரோனா அந்த மாவட்டங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் நேற்று கொரோனா நோயாளிகள் 39 பேர் பலியாயினர். இதையும் சேர்த்தால், சாவு எண்ணிக்கை 833 ஆக உயர்ந்தது.

More News >>