பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம்.. திக்விஜயசிங் மீது வழக்கு..
பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து மத்தியப் பிரதேசத்தில் போராட்டம் நடத்திய திக்விஜய்சிங் உள்ளிட்ட காங்கிரசார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல், டீசல் விலைகளை, காங்கிரஸ் ஆட்சியை விடத் தாறுமாறாக உயர்த்தி வருகின்றனர். 2014ம் ஆண்டில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் 108 டாலராக விற்றது. அப்போது இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.41 ஆக இருந்தது.
அதற்குப் பிறகு, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து கொண்டே வந்து, தற்போது பேரல் 40 டாலராக உள்ளது. ஆனாலும் பெட்ரோல் டீசல் மீதான கலால், வாட் வரிகளை மத்திய பாஜக அரசு உயர்த்தி வருவதால், தற்போது பெட்ரோல் ரூ.82 வரையிலும், டீசல் ரூ.80 வரையிலும் உயர்ந்துள்ளது.
இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் திக்விஜயசிங் தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் நேற்று மத்திய அரசைக் கண்டித்து சைக்கிள் பேரணி நடத்தினர். அப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
ஊரடங்கு காலத்தில் தடையை மீறி போராட்டம் நடத்தியதால் அவர்கள் மீது இபிகோ 341,188,143, 269, 270 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே தெலங்கானாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரசார் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.