சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்.. தமிழகம் முழுவதும் நாளை கடைகள் அடைப்பு

கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் மரணம் அடைந்த சம்பவத்திற்குப் பொறுப்பான காவல் துறையினரைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் அடைக்கப்படுகின்றன. சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 19ம் தேதியன்று ஊரடங்கு நேரம் கடந்த பின்பும் கடையை அடைக்க மறுத்துள்ளார்.

ஊரடங்கு விதிமுறைகளை மீறியதற்காக சாத்தான்குளம் காவல் துறையினர், அவரையும், அவரது தந்தை ஜெயராஜையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், அவர்கள் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு 2 பேர் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். அவர்கள் 2 பேரும் போலீசாரின் கடும் தாக்குதலில்தான் உயிரிழந்துள்ளனர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் உரிய நீதி கேட்டும், வருங்காலத்தில் காவல் துறையினரால் வணிகர்களுக்கு இது போன்ற அத்துமீறல்கள் நடைபெறக் கூடாது என்று வலியுறுத்தியும் நாளை வியாபாரிகள் கடையடைப்பு செய்கின்றனர்இது குறித்து, நெல்லையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியதாவது:கோவில்பட்டி சிறையில் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை(ஜூன்26) ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்.

காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் மருத்துவ அறிக்கை அளித்த மருத்துவர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். வரும் 30ம் தேதி அனைத்து காவலர்களுக்கும் புகார் மனு அளிக்கும் அறப்போராட்டமும் நடத்தப்படும்.இவ்வாறு விக்கிரமராஜா கூறினார்.இதே போல், தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் வெளியிட்ட அறிக்கையில், தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த படுகொலையைக் கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் வியாபாரிகள் கடைகளை அடைத்து நம் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

More News >>