தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 70 ஆயிரம் தாண்டியது..

தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 70 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கையும் 911 ஆக அதிகரித்துள்ளது.தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. தீவிரமாகப் பரிசோதனைகள் நடைபெறுவதால், தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.

அதில், சென்னையில் மட்டுமே 1200க்கும் மேற்பட்டோருக்குத் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. அதே போல், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் அதிகளவில் கொரோனா பரவியுள்ளது. இப்போது மற்ற மாவட்டங்களுக்கும் கொரோனா பரவத் தொடங்கியிருக்கிறது.தமிழகம் முழுவதும் நேற்று(ஜூன்25) ஒரே நாளில் 3359 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 151 பேரும் அடக்கம்.

தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 70,977 ஆக அதிகரித்துள்ளது. இதில், நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 2236 பேரையும் சேர்த்து 39,999 பேர் குணம் அடைந்துள்ளனர்.சென்னை மற்றும் புறநகர்களில் கடந்த 19ம் தேதி முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் மட்டுமே நேற்று முன் தினம் அதிகபட்சமாக 9371 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. இதில், 1654 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று சென்னையில் 1834 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை நோய் பாதித்தவர் எண்ணிக்கை 47,650 ஆக அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டில் நேற்று 191 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்துப் பாதிப்பு எண்ணிக்கை 4407 ஆக உள்ளது. இதே போல், திருவள்ளூரில் நேற்று 170 பேருக்குத் தொற்று உறுதியான நிலையில் மொத்தம் 3085 பேருக்கும், காஞ்சிபுரத்தில் நேற்று 98 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அம்மாவட்டத்தில் 1488 பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது.

மேலும், மதுரையில் 203 பேர், திருவண்ணாமலை 55 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் நேற்று 10, 20 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டியிருக்கிறது.இந்நிலையில், தமிழகத்தில் நேற்று கொரோனா நோயாளிகள் 45 பேர் பலியாயினர். இதையும் சேர்த்தால், சாவு எண்ணிக்கை 911 ஆக உயர்ந்தது.

More News >>