4 முதலமைச்சர்கள், 6 கேபினட் அமைச்சர்கள் ஏன் இந்த அவதூறு - சுஷ்மா ஸ்வராஜ் கேள்வி

பாஜகவில் நான்கு பெண் முதலமைச்சர்களும், ஆறு கேபினட் அமைச்சர்களும் இருந்தும் பாஜக பெண்களுக்கு எதிரானது என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுவது ஏன் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அங்குள்ள அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளன. கடந்த வாரம் வடோதராவில் பேசிய ராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ்.-இல் எத்தனை பெண்கள் உள்ளனர் என்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்தும் ஷாகாவில் பெண்கள் யாரேனும் பங்கேற்று பார்த்திருக்கிறீர்களா? என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில், குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், “பாஜகவை பெண்களுக்கு எதிரான கட்சி என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

ஆனால் பாஜக மட்டுமே பெண்களுக்கு முக்கிய பதவிகளை அளித்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் வெளியுறவு துறை அமைச்சராக பணிபுரிந்து வருகிறேன். இப்போது நிர்மலா சீதாராமன் பாதுகாப்பு துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

பாஜக ஆட்சியில் தான் நான்கு பெண் முதலமைச்சர்களும், 4 பெண் கவர்னர்களும், ஆறு பெண் கேபினட் அமைச்சர்களும் பதவி வகித்து வந்துள்ளனர். இருந்தும் எதிர்கட்சிகள் பாஜக மீது குற்றம் சுமத்துவது ஏன்” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

More News >>