`கிம் உடன் பேசப் போறேன் சந்திப்புக்குப் பச்சைக் கொடி காட்டிய ட்ரம்ப்!

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இசைவு தெரிவித்திருந்தார். இந்நிலையில், `கிம் உடன் சுமூகத் தீர்வு எட்டுவதற்கு பேசத் தயார்’ என்று ட்வீட் செய்துள்ளார்.

அமெரிக்கா – வடகொரியா இடையே கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நிலவி வந்த பனிப் போர்தான் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாகக் கருதப்பட்டது. இந்நிலையில், தொடர் அணு ஆயுதச் சோதனையில் ஈடுபட்டிருந்த வடகொரியா, கடந்த சில வாரங்களாக எந்த வித துடுக்கத்தன நடவடிக்கையிலும் இறங்கவில்லை. மேலும், தென் கொரியாவுடன் சுமூகத் தீர்வை எட்ட பேச்சுவார்த்தைக்குத் தயார் என்றும் கூறியிருந்தது.

இதையடுத்துதான், சில நாள்களுக்கு முன்னர் தென் கொரிய அரசு அதிகாரிகளுடன் கிம், நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, `வடகொரியா அமைதி நோக்கித் திரும்ப ஒத்துழைக்கும். இரு கொரிய நாடுகளும் அமைதிப் பாதையில் சென்று உலக நாடுகள் மத்தியில் ஒரு நன்மதிப்பைப் பெறும்’ என்று வடகொரிய அரசுத் தரப்பு அறிக்கை வெளியிட்டது. இதன் அடுத்தக் கட்டமாக, வடகொரியா, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று கூறப்பட்டது. எதிர்பார்த்தது போலவே, கிம் தரப்பினர், `அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நிலவும் ஸ்திரமற்றத் தன்மையை முடிவுக்குக் கொண்டு வர எத்தனிக்கிறது’ என்று தெரிவித்தனர்.

இதையடுத்து தனது அதிகார்பூர்வப் ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப், `கிம் ஜோங் உன், அணு ஆயுதங்களை இனி பயன்படுத்த மாட்டோம் என்று தென் கொரிய அதிகாரிகளிடம் உறுதி கொடுத்துள்ளார். இது ஒரு நல்ல முன்னேற்றம்தான். ஆனால், உடன்படிக்கை எட்டப்படும் வரை வடகொரியா மீதுள்ள தடைகள் தொடரும். கிம் உடன் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’ என்று பதிவிட்டுள்ளார்.

More News >>