அமெரிக்க நினைவுச் சின்னங்களை சேதப்படுத்தினால் கடும் தண்டனை.. டிரம்ப் புதிய உத்தரவு

அமெரிக்க நினைவுச் சின்னங்கள், தலைவர்களின் சிலைகளைச் சேதப்படுத்துவோருக்கு கடும் தண்டனை விதிக்கும் நிர்வாக உத்தரவை அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் பிறப்பித்துள்ளார். அமெரிக்காவில் சமீபத்தில் போலீசார் காவலில் இருந்த கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாயிட் படுகொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் நடுரோட்டில் அவரை கீழே தள்ளி அவரது கழுத்தில் பூட்ஸ் காலால் போலீசார் மிதித்த காட்சிகள், சமூக ஊடகங்களில் வைரலானது.

இதையடுத்து, அங்கு நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் வலுத்தன. அச்சமயம், இந்தியத் தூதரகத்திற்கு முன்பு உள்ள காந்தி சிலை மீது சிலர் பெயின்ட் வீசினர். வெள்ளை மாளிகைக்கு அருகில் இருக்கும் அந்நாட்டு முன்னாள் அதிபர் ஆன்ட்ரூ ஜாக்சன் சிலையைச் சேதப்படுத்தினர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று ஒரு நிர்வாக உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, அமெரிக்காவின் நினைவுச் சின்னங்கள், தலைவர்களின் சிலைகள் மற்றும் இதர பாரம்பரியச் சின்னங்களைச் சேதப்படுத்துவோருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த 2003ல் கொண்டு வரப்பட்ட நினைவுச் சின்னங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றவாளிக்கு 10 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. தற்போது அந்த தண்டனை காலத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் டிரம்ப் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். எனினும், தண்டனை பற்றிய விவரங்களை இன்னும் அமெரிக்க அரசு வெளியிடவில்லை.

More News >>