அனைத்து கட்சிக் கூட்டம் எதற்கு? எடப்பாடி பழனிசாமி கேள்வி..
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். மேலும், கொரோனா தடுப்பு பணி குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன் தினம் கோவை சென்றார். அதன்பின், அவர் சேலத்திற்குச் சென்றார். அங்கிருந்து அவர் திருச்சிக்குச் சென்று அம்மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி வருமாறு:கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு மத்திய அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவைத் தமிழக அரசு சரியான முறையில் பின்பற்றி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால்தான், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கூட கொரோனாவால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் இந்த அரசு எடுத்த நடவடிக்கைகளால் உயிர்ச்சேதம் குறைக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கால் முடங்கிப் போன தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். இதை ஏற்று, ஒரு லட்சத்து 58,579 சிறு, குறு நிறுவனங்களுக்கு 4,145 கோடி ரூபாய் மத்திய அரசின் நிதி உதவி கிடைத்துள்ளது. இதனால் 74,388 நிறுவனங்களுக்கு 2,265 கோடி ரூபாய்க் கடன் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சிப்காட் சார்பில் 1,077 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா ஒன்று ஆரம்பிக்கப்படும். மேலும்,150 ஏக்கர் பரப்பளவில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய உணவுப் பூங்காவும் அந்த வளாகத்திலேயே அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதில், 15 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
கடந்த 2 மாத காலமாக அரசுக்கு வரி வருவாய் இல்லை. தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. கடைகளும் திறக்கப்படாததால், அரசுக்கு வரவேண்டிய வருவாய் ரூ.35 ஆயிரம் கோடி வரவில்லை. மொத்தமாக ரூ.85 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.கொரோனா தடுப்பு மற்றும் ஊரடங்கு தொடர்பாக வரும் 29-ம் தேதி காலை 10 மணிக்கு மருத்துவ நிபுணர்கள், வல்லுநர்கள் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் அவர்கள் சொல்லும் கருத்துக்கள், மத்திய அரசின் முடிவுகளை பொறுத்துத் தான் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என முடிவு செய்யப்படும்.
கொரோனா வைரஸ் பரவல், உலகமே சந்தித்துக் கொண்டிருக்கிற பிரச்சினை. இதற்கு அனைத்துக் கட்சி கூட்டம் தேவையா? எனத் தெரியவில்லை. இரு மாநிலங்களுக்கு உட்பட்ட பிரச்சினை என்றால் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தலாம். இது முழுக்க, முழுக்க மருத்துவத் துறையைச் சார்ந்தது. மருத்துவ நிபுணர்கள், வல்லுநர்கள் உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத் துறை, ஐ.சி.எம்.ஆர். இப்படிப்பட்டவர்களின் கருத்துக்கள் அடிப்படையில்தான் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.இதில் அரசியல் கட்சிகள் பேசி செயல்படுத்த முடியாது. உரிய மருந்து கண்டு பிடித்தால்தான் இந்த வைரசை ஒழிக்க முடியும். அதுவரை பொதுமக்கள் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.