காவல்துறை ஒரு மணி நேரம் வேலை நிறுத்தம் செய்தால் என்னாகும்?
காவல் துறையினர் ஒரு மணி நேரம் வேலை நிறுத்தம் செய்தால் சட்டம் ஒழுங்கு என்ன ஆகும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
காவலர்களின் குறைகளை தீர்க்க ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான பல்வேறு நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று கடந்த 2012ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் சமீபத்தில் காவலர்கள் தற்கொலை அதிகரித்து வருவதால் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி நீதிபதி கிருபாகரன் முன்பு முறையீடு செய்யப்பட்டது.
இதனைத் தொடரந்து இந்த வழக்கு வியாழனன்று (மார்ச் 8) நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி “காவல் துறையினர் தற்கொலை செய்து வருவது தொடர் கதையாக வருகிறது. அவர்களுக்கு உரிய விடுப்பு வழங்கப்படுவதில்லை. அவர்கள் குடும்ப நிகழ்ச்சியில் கூட கலந்து கொள்ள முடியாதநிலை உள்ளது” என்றார்.
மேலும் அவர், காவல் துறையினர் ஒரு மணி நேரம் வேலை நிறுத்தம் செய்தால் சட்ட ஒழுங்கு என்ன ஆகும். விஐபிக்கள் வரும் இடங்களில் காவலர்கள் நாள் முழுவதும் நிறுத்தி வைப்பது ஏன்? அவர்களுக்கு எத்தனை நாள் பொது விடுமுறை வழங்கப்படுகிறது என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிப்பதாக அரசு வழக்குறைஞர் கூறினார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் காவல் துறையில் 19 ஆயிரம் இடங்கள் காலியாக இருப்பதாகவும், அதை நிரப்ப எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.