பெங்களூரு விமான நிலையத்தில் 108 அடியில் கெம்பே கவுடா சிலை.. பூமி பூஜையில் எடியூரப்பா..

பெங்களூரு விமான நிலையத்தில் 108 அடி உயரத்தில் கெம்பே கவுடா சிலை நிறுவுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. முதல்வர் எடியூரப்பா, தேவகவுடா, சிவக்குமார் பங்கேற்றனர்.கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது.கெம்பே கவுடாவின் 511வது பிறந்த நாளையொட்டி, இந்த விமான நிலைய வளாகத்தில் அவருக்கு 108 அடி உயர வெண்கலச் சிலை அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.

இந்த விழாவில் முதலமைச்சர் எடியூரப்பா பங்கேற்று பூஜையைத் தொடங்கி வைத்தார். விழாவில் மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், முன்னாள் பிரதமர் தேவுடா உள்பட எதிர்க்கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். கெம்பே கவுடா, பெங்களூரு மாநகரை வடிவமைத்த சிற்பி என்று சொல்லலாம். விஜய நகரப் பேரரசின் கீழ் பெங்களூரு இருந்த போது, இதன் தலைமை திவானாக பணியாற்றியவர்தான் கெம்பே கவுடா. இவரது ஆட்சி நிர்வாகத்தின் போது, பெங்களூருவில் பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.அவரது பெயரில் அமைந்துள்ள விமான நிலைய வளாகத்தில் ரூ.66 கோடி செலவில் 108 அடி உயர வெண்கலச் சிலை அமைக்க பாஜக அரசு முடிவெடுத்து, இன்று அந்தப் பணி தொடங்கியுள்ளது.

More News >>