ஊரடங்கு மட்டுமே தீர்வல்ல.. மருத்துவ நிபுணர்கள் கருத்து..

ஊரடங்கை நீட்டிப்பது மட்டுமே கொரோனாவுக்கு தீர்வல்ல என்று மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு, தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது ஊரடங்கு நாளையுடன்(ஜுன்30) நீட்டிக்கப்பட்டிருந்தாலும், பஸ்,ரயில் போக்குவரத்து மற்றும் சினிமா தியேட்டர்கள், மால்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவை தவிர பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

எனினும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா அதிகமாகப் பரவி வருவதால், கடந்த 19-ம் தேதி முதல் வரும் 30-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 12 நாட்களுக்குச் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், மருத்துவ நிபுணர்கள் குழுவினர் தங்கள் ஆலோசனைகளை, எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தனர். இதன்பின், மருத்துவ நிபுணர் குழுவினர் கூறியதாவது:தற்போது ஊரடங்கு மட்டுமே கொரோனா பரவலைத் தடுப்பதற்கான தீர்வல்ல. அதனால், ஊரடங்கை நீட்டிக்க நாங்கள் பரிந்துரைக்கவில்லை. அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கை நீட்டிக்கத் தேவையுமில்லை.

அதே சமயம், பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்தால் நோய் பரவலாகிறது என்று தெரிவித்துள்ளோம். அதனால், நோய்ப் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் கட்டுப்பாடுகளை விதிக்க பரிந்துரைத்துள்ளோம். சென்னையில் ஊரடங்கு காரணமாக நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் நாட்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நோய் கண்டறிதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியதே இதற்குக் காரணம்.

இவ்வாறு மருத்துவ நிபுணர்கள் கூறினர்.

More News >>