தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய போலீஸ் எஸ்.பி. தென்மண்டல ஐ.ஜி. நியமனம்..

சாத்தான்குளம் சம்பவத்தில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்து வருகின்றன. தென்மண்டல ஐ.ஜி, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மாற்றப்பட்டுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திய ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் கைது செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். அவர்களும் மறுநாளே மர்மமான முறையில் இறந்தனர். போலீஸ் நிலையத்தில் இருவரையும் போலீசார் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியதால்தான் அவர்கள் மரணம் அடைந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய, சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 ஏட்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்களும் மாற்றப்பட்டுள்ளனர். இந்த சூழலில், சாத்தான்குளம் போலீஸ் நிலையத்திற்குச் சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக மாஜிஸ்திரேட் சென்றார். அப்போது தூத்துக்குடி ஏ.எஸ்.பி குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோரிடம் மாஜிஸ்திரேட் சில ஆவணங்களைக் கேட்டார். ஆனால், அவர்கள் கொடுக்கவில்லை. மேலும், காவலர் மகாராஜன், மாஜிஸ்திரேட்டை கடுமையான வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், ஏ.எஸ்.பி. குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். காவலர் மகாராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் எஸ்.பி. அருண் பாலகோபாலன் மாற்றப்பட்டு, கட்டாயக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது விழுப்புரம் எஸ்.பி.யாக பணியாற்றி வரும் ஜெயக்குமார், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல், பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. முருகன், தென்மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இப்போது இந்த பணியில் உள்ள சண்முகராஜேஸ்வரன் ஓய்வு பெற்றார்.

More News >>