அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகமாகும்.. மருத்துவ நிபுணர் எச்சரிக்கை

அமெரிக்காவில் இம்மாத இறுதிக்குள் தினமும் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தொற்று அறியப்படும் நிலை ஏற்படலாம் என்று மருத்துவ நிபுணர் டாக்டர் அந்தோணி பாவ்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. உலகம் முழுவதும் இது வரை ஒரு கோடியே 5 லட்சத்து 92660 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. இதில் 5 லட்சத்து 14,083 பேர் உயிரிழந்துள்ளனர். 58 லட்சத்து 1646 பேர் குணம் அடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் தான் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது. அந்நாட்டில் 27 லட்சத்து 27,996 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. 2வது இடத்தில் பிரேசிலில் 14 லட்சத்து 84585 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், 3வது இடத்தில் ரஷ்யாவில் 6 லட்சத்து 47,849 பேருக்கும், 4வ இடத்தில் இந்தியாவில் 5 லட்சத்து 85,792 பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது.

அமெரிக்காவில் இது வரை ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர், கொரோனாவால் பலியாகியுள்ளனர். இந்நிலையில், கொரோனா தடுப்பு மருத்துவ நிபுணர் குழுவில் இடம் பெற்ற டாக்டர் அந்தோணி பாவ்சி கூறுகையில், அமெரிக்காவில் தற்போது மக்கள் கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்றுவதில்லை. கொரோனா நோயின் தீவிரத்தை மக்கள் புரிந்து கொள்ளவில்லை. கூட்டமாகச் செல்வது, முகக்கவசம் அணியாமல் இருப்பது போன்ற தவறுகளைத் தொடர்ந்து செய்கின்றனர். தற்போது தினமும் புதிதாக 40 ஆயிரம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு வருகிறது. இதே நிலை நீடித்தால், இம்மாத இறுதிக்குள் இது ஒரு லட்சத்தைத் தொடும் வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

More News >>