சாத்தான்குளம் சம்பவம்.. சி.பி.சி.ஐ.டி விசாரணை தொடங்கியது..

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஜெயராஜ், பென்னிக்ஸ் மர்ம மரணம் என்று குறிப்பிட்டு எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தியவர் ஜெயராஜ். கடந்த 19ம் தேதி இரவு ஊரடங்கு நேரத்தையும் தாண்டி, ஜெயராஜ் கடையைத் திறந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரிடம் போலீசார் கடையை அடைக்கச் சொல்லி கடுமையாகப் பேசியிருக்கிறார்கள். இதற்கு ஜெயராஜ் எதிர்ப்பு தெரிவித்துப் பேசவே, போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். தகவலறிந்து ஜெயராஜின் மகன் பென்னிக்ஸ் அங்கு ஓடி வந்தார். அப்போது போலீஸ் நிலையத்தில் இருவரையும் போலீசார் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இருவரையும் கைது செய்த போலீசார், கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். அங்குத் தந்தை-மகன் இருவரும் இறந்து விட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் பின்பு, சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 ஏட்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மற்ற போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஐகோர்ட் மதுரை கிளை, இந்த மரணங்கள் குறித்து தாமாக வழக்கு எடுத்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது, ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்குப் பரிந்துரைக்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து, தமிழக அரசின் முடிவில் தலையிட விரும்பவில்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், விசாரணையில் தாமதம் ஏற்படக் கூடாது என்று தெரிவித்தனர். அதனால், சாட்சியங்கள் கலைக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறிய நீதிபதிகள், சி.பி.ஐ. இந்த வழக்கை ஏற்கும் வரை, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்நிலையில், ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் குறித்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நெல்லை மாவட்ட சி.பி.சி.ஐ.டி போலீஸ் டி.எஸ்.பி. அனில்குமாரிடம், நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபினபு ஒப்படைத்தார்.இதைத் தொடர்ந்து, சாத்தான்குளம் போலீஸ் நிலையத்திற்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும், ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணங்களை மர்ம மரணம் என்று குறிப்பிட்டு எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.

More News >>