சத்தியமாக விடவே கூடாது.. சாத்தான்குளம் சம்பவம் குறித்து ரஜினி டிவிட்டரில் கருத்து..
சாத்தான்குளம் தந்தை,மகன் மரண வழக்கில் அனைவருக்கும் தண்டனை கிடைத்தே ஆக வேண்டுமென்று ரஜினி கூறியுள்ளார்.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தியவர் ஜெயராஜ். கடந்த 19ம் தேதி இரவு ஊரடங்கு நேரத்தையும் தாண்டி, ஜெயராஜ் கடையைத் திறந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரைக் கைது செய்த போலீசார், கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.
அங்கு தந்தை-மகன் இருவரும் இறந்து விட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து, இரவு முழுக்க கொடூரமாகத் தாக்கியதால்தான் இருவரும் இறந்தனர் என்று மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அனைத்து கட்சித் தலைவர்களும் இந்த சம்பவத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டனர். திமுக, அதிமுக சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு அளித்தனர். சாத்தான்குளம் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். காவலர்கள் முதல் எஸ்.பி. முதல் பணிமாற்றம் செய்யப்பட்டனர். மதுரை ஐகோர்ட் கிளை தாமாக வழக்கு எடுத்து, விசாரித்து வருகிறது. ஐகோர்ட் உத்தரவின்படி சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி அறிக்கை அளித்தார். அதில், தம்மை இழிவுபடுத்தும் வகையில் காவலர் மகாராஜன் பேசியதையும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் அவர், தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்துக் கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும் பேச்சும் அறிந்து, அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கிடைத்தே ஆக வேண்டும். சத்தியமாக விடவே கூடாது என்று கூறியிருக்கிறார்.