தந்தை மகன் கொலை: அரசுக்கு பாரதிராஜா எச்சரிக்கை..
சாத்தான்குளத்தில் கொரோனா ஊரடங்கு தடைகாலத்தில் ஊரடங்கு நேரம் முடிந்தும் கடை திறந்து வைத்திருந்ததாக கூறி தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸார் சிறையில் வைத்து அடித்து கொலை செய்ததை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து தேடியில் தங்கி இருக்கும் இயக்குனர் பாரதிராஜா தமிழ் இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பாக வெளியிட்ட அறிக்கை: பேரிடர் காலங்களைக் கையாளும் தமிழக அரசுக்கு... நேரம் காலம் பாராமல் தன்னுயிர் பற்றி கவலைப் படாமல் சிறப்பான பணியை முன்வைக்கும் முதல்வர் மற்றும் அதிகாரிகளை நன்றியோடு பார்க்கும் அதே வேளையில், இவ்வரசுக்கு அவப்பெயர் உருவாக்கும் ஈனக் காரியங்களை சில அதிகாரிகள் தங்கள் வரம்பு மீறிச் செய்துவிடுகிறார்கள்.
காத்துநிற்கும் காவல் அதிகாரிகள் மத்தியில் அப்பாவி மக்களை வேட்டையாடும் சில ஓநாய்களும் கலந்துவிடுவது ஒட்டுமொத்த காவல் துறையையே பழிச்சொல்லிற்கு ஆளாக்கிவிடுகிறது. விரும்பத்தகாமல் நடந்துவிடும் சில சம்பவங்களை, சமூகப் பொறுப்புடன் சுட்டிக்காட்ட நாங்கள் கடமைப் பட்டுள்ளோம்.. குற்றமற்றவர்களைத் தண்டிப்பதே தவறு என்ற ஜனநாயக கட்டமைப்பில் வாழும் நாம், எப்படி இரு உயிர்கள் வதைபட்டு அவதிக்குள்ளாகி மரணிக்க அனுமதித்துவிட்டோம் என்று புரியவில்லை. அந்த உயிர்களின் வலியும் வேதனையும் நம் வீட்டில் உள்ளவர்களுக்கு நேர்ந்தால் எப்படித் துடித்துப் போவேனோ அப்படித் துடித்துப் போகிறேன்... அவர்களும் நம்ம வீட்டுப் பிள்ளைகள் தானே?? என்ன அவன் சாத்தான் குளத்திலிருக்கிறான்.
நான் சென்னையிலிருக்கிறேன். ஆனால் அந்த இறப்பின் வலி, வேதனை ஏன் என்னை உறங்கவிடாமல் செய்து கொண்டிருக்கிறது?? அதிகாரம் ஒருபோதும் அப்பாவிகளின் உயிரெடுக்க துணைபோகக்கூடாது. இந்தக் காரியத்தில் அரசு பாதிக்கப்பட்ட மக்களின் மன உணர்வோடு கூட நிற்க வேண்டும். தனிப்பட்ட சில மனிதர்களின் தவறு ஒரு அரசாங்கத்தின் தவறல்ல. அது அரசோ, காவல்துறை சார்ந்த உயரதிகாரிகளோ எடுத்த முடிவல்ல என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் அரசின் நடவடிக் கைகள் வெளிப்படைத் தன்மையாக அமைய வேண்டும். அதுவே வரும் காலங்களில் மக்களின் மனதில் நல்லதொரு பிம்பத்தை இந்த ஆட்சிக்கு ஏற்படுத்தித் தரும்.
குற்றம் செய்தவர்களைப் பாரபட்சமின்றி இந்த அரசு கையாள வேண்டும் என்பதை ஒரு மூத்த குடிமகனாக, மக்களை நேசிக்கும் படைப்புகளைத் தந்த ஒரு படைப்பாளியாகக் கேட்கிறேன். செய்தவன் தவறுக்கான பொறுப்பை ஏற்கட்டும். நீதி அதற்கான வேலையைச் செய்யட்டும். இதை இந்த அரசு அழுத்தமில்லாமல் அனுமதிக்கக் கேட்டுக் கொள்கிறேன். காவல் இலாக்கா மட்டுமல்ல உங்கள் வசம். தனித்தனியாக இத்தமிழக மக்கள் உங்கள் பொறுப்பில்தானே உள்ளார்கள்?? வேலைப்பளு, மன அழுத்தம், மனச்சுமை காரணமாக அப்பாவி பிள்ளைகளின் உயிரை எடுத்து விட்டார்கள் என்று பதிலளிப்பது எந்தவிதத்திலும் ஈடாகாத பரிவற்ற குரலாகவே பார்க்கிறேன்.
கொரோனா காலத்தில் மருத்துவர்களுக்கு இல்லாத பணிச்சுமையா?? தூய்மைப் பணியாளருக்கு இல்லாத மன அழுத்தமா?? பொருளாதாரம் இழந்து வருமானம் இல்லாமல் இருக்கும் மக்களுக்கு இல்லாத நெருக்கடியா?? இப்படி மன அழுத்தத்தில் அனைவரும் தவறான முடிவு எடுத்தால் என்ன ஆவது?? எனவே தமிழக அரசு, தமிழகத்தில் வேலைப்பளுவால், பொதுமக்களை வதை பிணமாக்கும் மனம் அழுத்தம் யாரேனும் கொண்டிருந்தால் அக்காவலர்கள் அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள அனுமதியுங்கள். விடுப்பில் சென்று மன அமைதி கொள்ளட்டும். நேரடியாக அரசின் கீழ் பணிபுரிபவர்கள் கவனமற்று தன்னிலை இழந்து செயல் படுவது எத்தனை அவப்பெயரை உலக அளவில் அலைகளாக்கிவிடுகிறது என்பதை ஒவ்வொரு அரசுப் பணியாளர்களும் கவனத்தில் கொள்ள வலியுறுத்த வேண்டும்.
மக்களாகிய நாங்கள் எங்கள் உயிர் காத்து நிற்கும் காவலர்களுக்கு நன்றிக் கடன் கொண்டுள்ள இந்நேரத்தில் இப்பெருங்குற்றம் மற்ற கடமையாளர்களின் பெரும்பணியை மறக் கடிக்கச் செய்கிறது என்பது என்னைப் பொருத்தவரை விசனமே! அகால மரணமடைந்த ஜெயராஜனுக்கும் பென்னிக்ஸுக்கும் மட்டுமல்ல இந்த பேரிடரைப் பார்த்துப் பார்த்துக் கையாளும் அரசுக்கும் பெரும் அநீதி இழைத்துள்ளார்கள் சாத்தான் குள காவல் அதிகாரிகள் என்பதை முதல்வர் மனதாரப் புரிந்துகொள்ள வேண்டும். இக்குற்றத்தின் போது உடனிருந்த காவலர் ரேவதி மனசாட்சியின்படி நடந்துகொண்டதைப் பார்க்கும் போதும்... சில காவல் துறை உயரதிகாரிகளே கண்டித்திருப்பதும் மன ஆறுதலைத் தருகிறது. அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். காவலர் ரேவதியின் பாதுகாப்பை இவ்வரசு உறுதிசெய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
இச்சம்பவத்தில் தானாக முன் வந்து வழக்கை எடுத்துக் கொண்ட மதுரை உயர் நீதி மன்றத்திற்கும் நீதியரசர்களுக்கும் நன்றிகள். இரவு பகல் பார்க்காமல், கொரானாவின் தாக்கம் கண்டு தனியறைக்குள் புகுந்துகொள்ளாமல் முகக்கவசத்தை அணிந்துகொண்டு களப்பணியாற்றும் உங்கள் ஒட்டு மொத்த நற்பெயரை ஒரே சம்பவத்தில் சிதைத்த அக்கொடூரர்களை மேலும் மக்கள் பணி செய்யவிடாமல் தடுப்பதே பாதிக்கப்பட்ட உங்களுக்கும் அப்பாவிக் குடும்பத்திற்கும் ஈடுகட்டப் பட்ட நீதியாகப் பார்க்கப்படும். ஆதலின் என் குரலை ஒவ்வொரு தமிழனின் ஆதங்கக் குரலாக எடுத்துக் கொண்டு.. துறைரீதியான கடுமையான நடவடிக்கைகளை அக்கொடியோர் மீது மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவையின் சார்பாகவும்... ஒட்டுமொத்த திரையுலகின் சார்பாகவும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.