தமிழகத்தில் கொரோனா பாதிப்பு லட்சத்தை நெருங்குகிறது..

தமிழகத்தில் இது வரை 94,049 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இதில் 52,926 பேர் குணம் அடைந்துள்ளனர். 1264 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் இன்னும் கட்டுப்படவில்லை. தினந்தோறும் 3 ஆயிரம் பேருக்குக் குறையாமல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பரவி வருகிறது.

சென்னையில் மட்டுமே சராசரியாகத் தினமும் 2000 பேருக்கு மேல் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் நேற்று(ஜூலை1) ஒரே நாளில் 3882 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 75 பேரும் அடக்கம்.தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 94,049 ஆக அதிகரித்துள்ளது. இதில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 2852 பேரையும் சேர்த்து 52,926 பேர் குணம் அடைந்துள்ளனர்.

சென்னையில் மட்டுமே நேற்று 2182 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை நோய் பாதித்தவர் எண்ணிக்கை 60,533 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டில் நேற்று 226 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்துப் பாதிப்பு எண்ணிக்கை 5648 ஆக உள்ளது. இதே போல், திருவள்ளூரில் நேற்று 147 பேருக்குத் தொற்று உறுதியான நிலையில் மொத்தம் 3978 பேருக்கும், காஞ்சிபுரத்தில் நேற்று 86 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அம்மாவட்டத்தில் 2067 பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது.

மேலும், மதுரையில் நேற்று ஒரே நாளில் 297 பேருக்குத் தொற்று உறுதியானதால், அங்குப் பாதிப்பு 2858 ஆக அதிகரித்தது. இதே போல், திருவண்ணாமலையில் 1859 பேருக்கும், கடலூரில் 1087 பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது. மற்ற மாவட்டங்களிலும் 300, 400 பேருக்குக் குறையாமல் கொரோனா தொற்று பரவியிருக்கிறது.இந்நிலையில், தமிழகத்தில் நேற்று கொரோனா நோயாளிகள் 63 பேர் பலியாயினர். இதையடுத்து, பலி எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது. நேற்று வரை 1264 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

More News >>