8 போலீசாரை சுட்டுக் கொன்ற ரவுடிகள் தப்பியோட்டம்.. உ.பி.யில் அதிகாலை பயங்கரம்..

உத்தரப்பிரதேசத்தில் ரவுடிகளை பிடிக்கச் சென்ற போலீஸ் அதிகாரிகள் மீது அவர்கள் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் டி.எஸ்.பி. உள்பட 8 போலீசார் கொல்லப்பட்டனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் உ.பி.யில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்கு போலீசார் தேடி வந்த பிரபல தாதா விகாஸ் துபே, கான்பூர் அருகே பிகாரு என்ற கிராமத்தில் பதுங்கியிருக்கும் தகவல் போலீசாருக்கு நேற்று கிடைத்தது. அந்த தாதா மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால், அந்த ரவுடியை பிடிக்க போலீசார் ரகசியத் திட்டம் போட்டனர்.

அதன்படி, இன்று அதிகாலையில் போலீசார் பெரும்படையுடன் அந்த கிராமத்திற்குள் நுழைந்தனர். அந்த ரவுடி பதுங்கியிருந்த வீட்டுக்குச் செல்லும் வழியை அடைத்து பாறாங்கற்களைப் போட்டு வைத்திருந்தனர். அந்த கும்மிருட்டிலும் போலீசார் அவற்றை அகற்றி விட்டு, போலீஸ் ஜீப்களில் அந்த வீட்டை நெருங்கியுள்ளனர். அப்போது வீட்டிலிருந்த ரவுடி துபே மற்றும் கூட்டாளிகள் உஷாராகி, போலீசார் மீது துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். போலீசாரும் பதிலுக்குச் சுட்டனர்.

ஆனால், போலீசார் வெட்டவெளியில் நின்றிருந்ததால் அவர்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகி விட்டனர். டி.எஸ்.பி. தேவேந்திர குமார் மிஸ்ரா, இன்ஸ்பெக்டர்கள் மகேஷ்யாதவ், அனுப்குமார், சப்-இன்ஸ்பெக்டர் நெபுலால் மற்றும் போலீசார் பாபு, சுல்தான்சிங், ராகுல், ஜிதேந்திரா ஆகிய 8 பேர் அந்த இடத்திலேயே பலியாகி விட்டனர். மேலும் 4 போலீசார் காயமடைந்தனர். இதில் போலீஸ் படை நிலைகுலைந்தது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, துபே மற்றும் கூட்டாளிகள் தப்பியோடி விட்டனர்.

அதிகாலை இருட்டில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்து போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் அருகில் உள்ள கன்னோஜ் மாவட்டத்தில் இருந்து ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டனர். துபே கூட்டாளிகளை வளைப்பதற்காக மாவட்டம் முழுவதும் தீவிர வாகனச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, முதல்வர் யோகி ஆதித்யநாத், டிஜிபி அவஸ்தியை தொடர்பு கொண்டு காயமடைந்த போலீசாருக்கு உடனடியாக தகுந்த உதவிகளைச் செய்யுமாறும், கிரிமினல்களை சுட்டுப் பிடிக்கவும் உத்தரவிட்டார்.

சம்பவம் குறித்துக் கூடுதல் டிஜிபி சிங் கூறுகையில், கொலை முயற்சி வழக்கில் ரவுடி துபே மற்றும் கூட்டாளிகளைக் கைது செய்வதற்காக அதிகாலையில் போலீசார், பிகாரு கிராமத்திற்குச் சென்றனர். ரவுடிகள் போட்டு வைத்திருந்த கற்கள், தடைகளை ஜேசிபி மூலம் அகற்றி விட்டுச் செல்வதற்குள் அவர்கள் உஷாராகி விட்டனர். இதனால், இந்த சம்பவம் நடந்துள்ளது. குற்றவாளிகள் விரைவில் பிடிக்கப்படுவார்கள் என்றார்.

More News >>