தமிழக பாஜகவில் 238 நிர்வாகிகள் நியமனம்.. துணை தலைவர் வி.பி.துரைசாமி..

தமிழக பாஜக துணைத் தலைவர்களாக வி.பி.துரைசாமி, வானதி சீனிவாசன் உள்ளிட்ட 10 பேரை நியமித்து கட்சித் தலைவர் எல்.முருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், கே.டி.ராகவன் உள்பட 4 பேரை பொதுச் செயலாளராக நியமித்துள்ளார்.மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் 2வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்றாலும், தமிழகத்தில் வளரும் கட்சியாகவே இருக்கிறது. இக்கட்சியின் தமிழக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா கவர்னராக பொறுப்பேற்ற பின்பு, நீண்ட காலமாகத் தலைவர் பதவியே காலியாக இருந்தது.

இந்தப் பதவிக்கு வானதி சீனிவாசன், கே.டி.ராகவன், நயினார் நாகேந்திரன், முருகானந்தம், நாராயணன் திருப்பதி உள்ளிட்ட பலரும் தீவிரமாக முயற்சித்து வந்தனர். கடைசியில் யாருமே எதிர்பார்க்காத எல்.முருகனை மாநில தலைவராக அகில இந்தியத் தலைமை நியமித்தது. இது பலருக்கும் அதிருப்தியைத் தந்தாலும் மத்தியில் ஆட்சியில் இருப்பதால் யாரும் வாயைத் திறக்கவில்லை.இந்நிலையில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எல்.முருகன், அதே சமூகத்தைச் சேர்ந்த திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமியை பாஜகவுக்கு இழுத்தார். பெரிய கட்சியான திமுகவில் இருந்து வந்துள்ளதால், ஏதாவது வாரியத் தலைவர் பதவி அல்லது முருகன் ஏற்கனவே வகித்த தாழ்த்தப்பட்டோர் ஆணையத் தலைவர் பதவி தமக்குக் கிடைக்கும் என்று வி.பி.துரைசாமி எதிர்பார்த்தார். ஆனால், அது நடக்கவில்லை.

அவருக்கு 10 மாநில துணைத் தலைவர் பதவிகளில் ஒன்றை எல்.முருகன் வழங்கியுள்ளார். வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோரையும் துணைத் தலைவர்களாக முருகன் நியமித்துள்ளார். மேலும், சக்கரவர்த்தி, கே.எஸ்.நரேந்திரன், எம்.முருகானந்தம், எம்.என்.ராஜன், மகாலட்சுமி, கனகசபாபதி, புரட்சிக் கவிதாசன் ஆகியோரும் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுச் செயலாளர்களாக கே.டி.ராகவன், ஜி.கே.செல்வகுமார், பேராசிரியர் சீனிவாசன், கரு.நாகராஜன் ஆகியோரும், மாநிலச் செயலாளர்களாக சண்முகராஜ், டால்பின்ஸ்ரீதர், வரதராஜன், உமாபதி, பாஸ்கர், மலர்க்கொடி, கார்த்தியாயினி, பார்வதி நடராஜன், சுமதி வெங்கடஷே் ஆகியோரும், பொருளாளராக எஸ்.ஆர்.சேகரும், இணை பொருளாளராக சிவசுப்பிரமணியனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர, அறிவுஜீவிகள் அணி, அரசு தொடர்பு அணி உள்பட பல்வேறு அணித் தலைவர்கள், 60 மாவட்டப் பார்வையாளர்கள், 79 செயற்குழு உறுப்பினர்கள், 8 செய்தி தொடர்பாளர்கள், 39 தேசிய பொதுக் குழு உறுப்பினர்கள் என்று மொத்தம் 238 பேரை எல்.முருகன் நியமித்துள்ளார். தேசியப் பொதுக் குழு உறுப்பினர்களில் திருச்சி தினமலர் ஆசிரியர் ஆர்.ராமசுப்புவும் ஒருவர். இவரது சகோதரர் ஆர்.ஆர்.கோபால்ஜி, விசுவ இந்து பரிஷத் பொதுச் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>