கொரோனா மருந்து ஆய்வு.. ஆக.15ல் முடிவு வெளியாகும்..

ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம், கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளது. இது தற்போது மனிதப் பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் முடிவு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகவுள்ளது.உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருக்கிறது. இந்தியாவில் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 6.25 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், உலகின் பல்வேறு நாடுகளில் இந்நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவிலும் சில நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன.

ஐதராபாத்தில் பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன்(ஐ.சி.எம்.ஆர்) இணைந்து, கொரோனா தடுப்புக்கு கோவாக்சின் என்ற மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. இது விலங்குகளுக்குக் கொடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. அடுத்த கட்டமாக, இதை மனிதர்களுக்கு பல்வேறு விதங்களில் அளித்து ஆய்வு செய்வதற்கு மருந்து கட்டுப்பாட்டுத் துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், ஐ.சி.எம்.ஆர். இயக்குனர் பல்ராம் பார்க்கவா, பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கோவாக்சின் மருந்தை ஆய்வு செய்யும் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும். இதன் ஆய்வுகள் ஆகஸ்ட் 15க்குள் முடிக்கப்பட்டு, ஆக.15ல் ஆய்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார். எனவே, கொரோனா தடுப்பு மருந்து ஆக.15ல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>