ஜூலை மாதமும் ரேஷனில் இலவச பொருட்கள் சப்ளை.. 6ம் தேதி டோக்கன் விநியோகம்..

ஊரடங்கைக் கருத்தில் கொண்டு ஜூலை மாதத்திற்கும் ரேஷன் கடைகளில் இலவச அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் என்றும், இதற்கான டோக்கன் விநியோகம் வரும் 6ம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா ஊரடங்கால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதைக் கருத்தில் கொண்டு, ரூ.3,280 கோடி மதிப்பீட்டில் சிறப்பு நிவாரண திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, ஏப்ரல் மாதத்தில் அனைத்து அரிசி ரேஷன்கார்டுகளுக்கும் தலா ரூ.1000 உதவித் தொகையுடன் அரிசி, சர்க்கரை, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மே, ஜூன் மாதங்களிலும் இது வழங்கப்பட்டது.

தற்போது, ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும், அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், அரிசி ஆகியவை இலவசமாக வழங்க தற்போது அரசு உத்தரவிட்டுள்ளது.நோய்த் தொற்று ஏற்படாத வண்ணம் மேற்படி அத்தியாவசியப் பொருட்கள் பாதுகாப்பாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், வரும் 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை, ரேஷன் அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும்.

அதே டோக்கன்களில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள், டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் தங்களுக்கான ரேஷன் கடைகளுக்குச் சென்று 10ம் தேதி முதல் அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம். தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அவரவர் வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும். பொதுமக்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More News >>