தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சம் தாண்டியது.. பலி 1385 ஆக உயர்வு..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதில் 1385 பேர் பலியாகியுள்ளனர். சீன வைரஸ் நோயான கொரோனா, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் 2 லட்சம் பேருக்கு மேல் பரவியிருக்கிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகத் தினமும் புதிதாக 4 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவி வருகிறது. நேற்று(ஜூலை3) மட்டும் புதிதாக 4264 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 65 பேரும் அடக்கம்.

தற்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. நேற்றைய 4264ஐ சேர்த்து மொத்தம் ஒரு லட்சத்து 2721 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 2387 பேரையும் சேர்த்து மொத்தம் 58,378 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு நேற்று 64 பேர் உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 1385 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இது வரையில் மொத்தம் 12 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் தினமும் 2000 பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. நேற்று 2082 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 64,689 ஆக அதிகரித்துள்ளது.நேற்று, செங்கல்பட்டில் 330 பேர், திருவள்ளூரில் 172 பேர், காஞ்சிபுரத்தில் 121 பேர், மதுரையில் 287 பேர், கோவையில் 36 பேர், சேலத்தில் 33 பேர், ராமநாதபுரத்தில் 72 பேர், கள்ளக்குறிச்சியில் 79 பேர், திருவண்ணாமலையில் 145 பேர், வேலூரில் 144 பேர் விருதுநகரில் 65 பேர் மற்றும் விழுப்புரத்தில் 32 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 17 மாவட்டங்களில் தலா ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பாதித்திருக்கிறது.

More News >>