கொரோனா சிகிச்சை.. அதிக லேப்களுக்கு அனுமதி தர முடிவு..

கொரோனா நோய் அறிகுறியை அரை மணி நேரத்தில் கண்டுபிடிக்கும் ட்ரூநாட், சி.பி.நாட் பரிசோதனைகளைச் செய்ய விரும்பும் லேப்களுக்கு விரைவாக அனுமதி பெற மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.சீன வைரஸ் நோயான கொரோனா, உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் 6 லட்சம் பேருக்கு மேல் கொரோனா பாதித்துள்ளது.

இந்நிலையில், டெல்லி, மும்பை போன்ற கொரோனா பாதித்த மாநிலங்களில் விரைவாக கொரோனா பரிசோதனை செய்யும் ரேபிட் ஆன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், கொரோனா பாதிப்பில் 2வது இடத்தில் உள்ள தமிழகத்தில் முடிவு தெரிய 2 நாள் ஆகக் கூடிய ஆர்.டி-பிசிஆர் பரிசோதனைகள் மட்டுமே செய்யப்படுகின்றன. அதேசமயம், 12 லட்சத்திற்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பரிசோதனை செய்த அரை மணி நேரத்தில் முடிவு தெரியக் கூடிய ட்ரூநாட், சி.பி.நாட் ஆகிய பரிசோதனைகளைச் செய்வதற்கு அதிகமான தனியார் லேப்களை ஊக்குவிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்(ஐசிஎம்ஆர்) வலியுறுத்தியிருக்கிறது.இது தொடர்பாக, ஐசிஎம்ஆர் இயக்குனர் அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கும் நேற்று ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், விரைவான பரிசோதனை செய்யும் ட்ரூநாட், சி.பி.நாட் ஆகிய பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு அதிகமான தனியார் லேப்களை ஊக்குவிக்க வேண்டும். இந்த லேப்களுக்கு என்.ஏ.பி.எல். அங்கீகாரம் பெற்றுத் தருவதற்கு மாநில அரசுகள் முயற்சிக்க வேண்டும். இந்த அங்கீகாரம் ஒரு வாரத்திற்குள் கிடைப்பதற்கு ஐ.சி.எம்.ஆர். உறுதி செய்யும் என்று தெரிவித்துள்ளது. இதன்படி, மாநில அரசுகள், கொரோனாவை கண்டறிய இந்த துரிதப் பரிசோதனைகளை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த பரிசோதனை கட்டணம் சுமார் ரூ.1200க்குள் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

More News >>