சொந்தமாக வீடு இல்லாததால் கட்சி அலுவலகத்தில் குடியேறிய முதலமைச்சர்!

திரிபுராவில் ஆட்சியை இழந்ததை அடுத்து, அம்மாநில முதலமைச்சர் தனக்கு சொந்தமாக வீடு இல்லாத காரணத்தால் கட்சி அலுவலகத்தில் குடியேறியுள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளாக திரிபுராவில் ஆட்சி நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியது.

எளிமைக்கு பெயர் பெற்ற மாணிக் சர்க்கார், 1998ஆம் ஆண்டு முதல், 2003, 2008, 2013 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களிலும் வென்று முதல்வரானார். தொடர்ந்து நான்கு முறையாக மாணிக் சர்க்கார் முதல்வராகப் பதவி வகித்தார்.

இந்நிலையில், மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு வாக்கு எண்ணப்பட்டது. ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்ததால், அங்கு வாக்குகள் எண்ணப்படவில்லை. இதில் 35 இடங்களில் பாஜக வெற்றிபெற்றது. அதன் கூட்டணி கட்சியான பூர்வகுடி மக்கள் கட்சி 8 இடங்களை கைப்பற்றியுள்ளது. மொத்தம் 43 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றிபெற்றது.

இதையடுத்து முதல்வர் மாணிக் சர்க்கார் தனது பதவியை ராஜினாமா செய்தார். அங்கு புதிய அரசு பதவியேற்கும் வரை பொறுப்பு முதல்வராக இருந்து வருகிறார். எளிமையானவர், ஊழல் அற்றவர் என புகழப்படும் மாணிக் சர்க்கார் முதல்வர் பதவியை ராஜினமா செய்ததைத் தொடர்ந்து உடனடியாக அரசு வீட்டை காலி செய்தார்.

நாட்டிலேயே சொந்த வீடு இல்லாத, மிகவும் எளிமையான முதல்வராக இருந்து வந்தார் மாணிக் சர்க்கார். அவருக்கு குடியிருக்க வீடு இல்லாததால் திரிபுரா தலைநகர் அகர்தலாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தனது மனைவியுடன் குடியேறியுள்ளார்.

கட்சி அலுவலகத்தின் மேல் தளத்தில் உள்ள அறையில் அவரும் அவரது மனைவி பாஞ்சாலி சர்க்காரும் தங்கியுள்ளனர். வசதிகள் இல்லாத சாதாரண அறையில் இருவரும் தங்கி வழக்கம்போல் தங்கள் பணிகளை செய்து வருகின்றனர்.

More News >>