பிரமதர் மோடி வருகைக்காக ராமர் கோயில் பணி காத்திருப்பு.. ராமஜென்ம பூமி டிரஸ்ட் தகவல்..

பிரதமர் மோடி அயோத்திக்கு வருகை தந்த பின்பு, ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கும் என்று ராமஜென்ம பூமி டிரஸ்ட் தெரிவித்துள்ளது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு, சர்ச்சையிலிருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கும், பாபர் மசூதிக்கு வேறொரு இடம் ஒதுக்கவும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதன்படி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக மகந்த் நிருத்ய கோபால் தாஸ் உள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான ஆரம்பக் கட்டப் பணிக்குப் பூஜைகள் நடத்தப்பட்டு விட்டது. எனினும், கோயில் கட்டும் பணி தொடங்கவில்லை.

இந்நிலையில், அறக்கட்டளை தலைவர் மகந்த் என்.கே.தாஸின் செய்தி தொடர்பாளரான மகந்த் கமல்நாயன் தாஸ் கூறியதாவது:ராமஜென்ம பூமி அறக்கட்டளை கூட்டம் வரும் 17ம் தேதி அயோத்தியில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் ராமர் கோயில் கட்டும் பணி குறித்து விவாதிக்கப்படும். அயோத்திக்குப் பிரதமர் மோடி வருவது தள்ளிப் போய் விட்டது. கட்டுமானப் பணிக்கு முன்பாக அவர் ஒரு முறை வந்து செல்ல வேண்டும். அவரது வருகைக்குப் பின், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணி தொடங்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

More News >>