கமல்ஹாசன் கட்சி ஐகோர்ட்டில் வழக்கு..
சாத்தான்குளத்தில் தந்தை மகன் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பல்வேறு இடங்களில் போலீசாரால் அப்பாவி மக்கள் தாக்கப்பட்ட சம்பவம் இணைய தளங்களில், டிவிகளில் ஒளிபரப்பாகி வருகிறது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பாவி மக்கள் மீது போலீசார் நடத்தும் தாக்குதலை விசாரிக்கச் சட்ட விதிகளின் படி தகுந்த குழு அமைக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர இருப்பதாகக் கமல்ஹாசன் நேற்று தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மையம் வெளியிட்டுள்ள ஊடக செய்தியில் கூறியிருப்பதாவது சாத்தான்குளம் தந்தை- மகன் காவல் துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதி போதணை மனுவைத் தாக்கல் செய்தது. அம்மனுவானது தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்தச் சட்டம் 2013 இன் படி நிறுவப்பட்டுள்ள காவல் துறை புகார் ஆணையத்தின் அமைப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அச்சட்டம் முறையானதாக இல்லை என்றும் நடைமுறை தன்மைக்கு போதுமானதாக இல்லை என்றும் உயர்நீதி மன்றம் வழிகாட்டுதலுக்குப் புறம்பானதாக உள்ளது எனவும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி காவல்துறை புகார் ஆணையமானது மாநிலத் தலைமை ஆணையம் மற்றும் மாவட்ட வாரியான ஆணையங்களாக அமைக்கப்படும் என்றும் மாநிலத் தலைமை ஆணையத்தில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளையோ அல்லது உயர் நீதிமன்ற நீதிபதிகளையோ பணியமர்த்த வேண்டும் என்றும் மாவட்ட வாரியான ஆணையங்களில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியையோ அல்லது ஓய்வு பெற்ற காவலர் அல்லாத அரசு ஊழியர்களையோ பணியமர்த்த வேண்டும் என்றும் உயர்நீதி மன்றம் வழிகாட்டுதல் இருக்கும் பட்சத்தில் இந்த அரசு வழிகாட்டுதல்களுக்கு மாறாகச் செயல்பட்டதன் விளைவு இந்த இரட்டைப் படுகொலை சம்பவம்.இந்த அரசு, ஆணையங்களை அமைத்து அதில் காவல் அதிகாரிகளையே நிர்வாகிகளாக பணியமர்த்தியுள்ளது தான் இதன் தோல்விக்குக் காரணம். அது மட்டுமன்றி இவ்வாறு செய்தது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும் அதன் சரத்துக்களும் எதிரானதாக உள்ளது. அதனாலேயே மக்கள் நீதி மய்யம் கட்சி இந்த அரசின் மெத்தனப் போக்கை எதிர்த்து மேற்கண்ட சட்டத்தைத் திருத்தி ஆணையத்தை மாற்றியமைக்க நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்ட நேர்ந்துள்ளது.
இவ்வாறு மக்கள் நீதி மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளது.