தமிழகத்தில் கொரோனா பலி 1500ஐ தாண்டியது.. கிராமங்களிலும் நோய் பரவுகிறது..

தமிழகத்தில் கொரோனா நோய்க்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 1510 ஆக உயர்ந்துள்ளது. நோய் பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 11,151 ஆக அதிகரித்துள்ளது.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியிருக்கிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில்தான் அதிகமாகப் பரவியிருக்கிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகத் தினமும் புதிதாக 4000 பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவி வருகிறது. நேற்று(ஜூலை5) மட்டும் புதிதாக 4150 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 83 பேரும் அடக்கம். தற்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 11,151 ஆக அதிகரித்துள்ளது. இதில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 2186 பேரையும் சேர்த்து மொத்தம் 62,778 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து, தற்போது 46,860 பேர் சிகிச்சையில் உள்ளனர்.கொரோனாவுக்கு நேற்று 60 பேர் உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 1510 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று மட்டும் 34,102 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தத்தில் இது வரையில் 12 லட்சத்து 83,419 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.சென்னையில் தினமும் சுமார் 2000 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களாக இது சற்று குறைந்துள்ளது. நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 68,254 ஆக அதிகரித்துள்ளது. இதில் 50 சதவீதம் பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

செங்கல்பட்டில் நேற்று 274 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அந்த மாவட்டத்தில் மொத்தம் 6,633 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. திருவள்ளூரில் நேற்று 209 பேருக்கு கொரேனா கண்டறியப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 4806 ஆக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரத்தில் 152 பேருக்குக் கண்டறியப்பட்ட நிலையில், அங்குப் பாதிப்பு எண்ணிக்கை 2547 ஆக அதிகரித்திருக்கிறது. மதுரையில் நேற்று 307 பேருக்கு கொரோனா பரவிய நிலையில், அந்த மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4035 ஆக அதிகரித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் மதுரையைத் தாண்டி சுற்றியுள்ள கிராமங்களிலும் கொரோனா பரவியிருக்கிறது. இதையடுத்து, இந்த மாவட்டத்தில் பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவலில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அடுத்து 4வது இடத்திற்கு வந்துள்ளது.

More News >>