கொரோனா பாதிப்பில் 3வது இடம் பிடித்தது இந்தியா..

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா, ரஷ்யாவை மிஞ்சி 3வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் சுமார் 7 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.சீன வைரஸ் நோயான கொரோனா, உலகம் முழுவதும் பாதித்திருக்கிறது. இந்தியாவில் தினமும் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் தினமும் தொற்று கண்டறியப்படுபவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக 24,248 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 6 லட்சத்து 97,413 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் நேற்று உயிரிழந்த 425 பேரையும் சேர்த்தால் பலி எண்ணிக்கை 19,673 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்தவர்களில் 4லட்சத்து 24,438 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2 லட்சத்து 53,287 பேர் சிகிச்சையில் உள்ளனர்.நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில்தான் 2 லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 2வது இடத்தில் உள்ள தமிழகத்தில் ஒரு லட்சத்து 11,151 பேருக்கும், 3வது இடத்தில் டெல்லியில் 99,444 பேருக்கும் கொரோனா நோய் பாதித்துள்ளது.

உலக அளவில் பார்த்தால், அமெரிக்காவில் 29 லட்சத்து 82,928 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு நோய் பரவலில் முதல் இடத்தில் உள்ளது. 2வது இடத்தில் பிரேசிலில் 16 லட்சம் பேருக்குப் பாதித்துள்ளது. 3வது இடத்தில் இது வரை ரஷ்யா இருந்தது. தற்போது ரஷ்யாவை முந்தி, இந்தியா 3வது இடத்திற்கு வந்துள்ளது. தற்போது, இந்தியாவில் 6 லட்சத்து 98,233 பேருக்கும், ரஷ்யாவில் 6 லட்சத்து 81,251 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

More News >>