கோடிக்கணக்கில் மோசடி.. மெரிடியோ டிரேடிங் கம்பெனி நிர்வாக இயக்குனர் கைது.. பங்குதாரர்களுக்கு போலீஸ் வலை..

மக்களிடம் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்து, கோடிக்கணக்கில் முதலீடுகளைப் பெற்ற மெரிடியோ டிரேடிங் கம்பெனி நிர்வாக இயக்குனர் சரவணன் கைது செய்யப்பட்டார். தலைமறைவான மற்ற பங்குதாரர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை மற்றும் கோவையில் இயங்கி வந்த மெரிடியோ டிரேடிங் கம்பெனி(Meridio Trading Corporation), நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் வசூலித்து பங்குச் சந்தை மற்றும் தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் நிறுவனச் சந்தைகளில் வர்த்தகம் செய்து வந்தது. மாதந்தோறும் முதலீட்டுத் தொகையில் குறைந்தபட்சம் 10 சதவீதத்தை லாபமாகத் தருவதாக இந்த கம்பெனி ஒப்பந்தம் செய்ததை நம்பி, பலரும் இதில் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர்.

இதன் நிர்வாக இயக்குனராக கோபிசெட்டிபாளையம் அம்பிகா நகரில் வசித்த ஜி.சரவணன், பங்குதாரர்களாக ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் கிருஷ்ணமூர்த்தி தோட்டத்தில் வசித்த ரவிக்குமார், கோபிசெட்டிபாளையம் மாதேஸ்வரன் கோயில் தெருவில் உள்ள வாசு லேஅவுட்டில் வசித்த எம்.வி.மகாதேவன் ஆகியோர் உள்ளனர். இவர்கள் பல மாதங்களாக முதலீட்டாளர்களுக்கு மாதாந்திர லாபத் தொகையும் தராமல், முதலீட்டுப் பணத்தையும் திருப்பி தராமல் மோசடி செய்து வந்தனர்.

கடந்த ஜனவரி மாதமே இந்த மோசடி கம்பெனியை பற்றி செய்தி வெளியிட்டிருந்தோம். வாசிக்க : கோடிக்கணக்கில் வசூலித்து மோசடி.. மெரிடியோ டிரேடிங் கம்பெனி மீது முதலீட்டாளர்கள் பகீர் புகார்..?.

பின்னர், நிர்வாக இயக்குனர் சரவணன், பங்குதாரர்கள் ரவிக்குமார், வைத்தீஸ்வரன், மகாதேவன் ஆகியோர் மொத்தப் பணத்தையும் எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து, பலரும் இவர்கள் மீது போலீசில் புகார் கொடுக்கத் தொடங்கினர்.

கோவை ஒண்டிப்புதூர் காமாட்சி புரத்தைச் சேர்ந்த கருணை லெனின் என்பவர் தன்னிடம் ரூ.1.5 லட்சம் மோசடி செய்து விட்டதாகப் புகார் கொடுத்திருந்தார். இதனடிப்படையில் கோவை பொருளாதாரக் குற்றப்பிரிவு காவலர் மோசடி வழக்குப் பதிவு செய்து நிர்வாக இயக்குனர் சரவணனைக் கைது செய்தனர். மேலும், தலைமறைவான மற்ற பங்குதாரர்களையும் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த மோசடிப் பேர்வழிகள் சுமார் நான்கைந்து கோடி வரை மக்களிடம் வசூலித்திருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது.

இது குறித்து, கோவையைச் சேர்ந்த முதலீட்டாளர் கூறியதாவது:நானும், எனது நண்பர்களும் இந்த நிறுவனத்தில் ரூ.3 லட்சத்திற்கு மேல் முதலீடு செய்திருக்கிறோம். இந்த நிறுவனம் ஆரம்பத்தில் வாடிக்கையாளர்களுக்கு முறையாக 10 சதவீத பணத்தை லாபமாக அளித்து வந்தது. ஆனால், அதற்குப் பிறகு வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர லாபத்தையும் தராமல், முதலீட்டுப் பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றத் தொடங்கினர். பணத்தைத் திருப்பி கேட்ட முதலீட்டாளர்களை, நிறுவனத்தில் பணியாற்றும் சில ஊழியர்களைக் கொண்டு மிரட்டினர். எப்படியாவது பணத்தை மீட்க வேண்டுமென்பதற்காகப் பலரும் புகார் கொடுக்காமல் காத்திருந்தனர். ஆனால், தற்போது ஒரு புகாரில் சரவணன் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும். மேலும், அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்று, முதலீட்டாளர்களுக்கு அவர்களின் தொகையைத் திருப்பித் தர வேண்டும். இதற்காக முதலீட்டாளர்கள் ஒன்று சேர்ந்து சட்டரீதியாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்இவ்வாறு அவர் தெரிவித்தார்.

More News >>