இந்தியாவில் இது வரை ஒரு கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை..
இந்தியாவில் இது வரை ஒரு கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. எனினும், மற்ற நாடுகளை ஒப்பிட்டால், பரிசோதனை விகிதம் மிகவும் குறைவுதான்.இந்தியாவில் நேற்று(ஜூலை6) வரை 6 லட்சத்து 97,284 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 19,700 பேர் வரை உயிரிழந்துள்ளனர். கடந்த மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்னமும் முழுமையாக விலக்கப்படவில்லை. பஸ், ரயில் போக்குவரத்து முழு அளவில் இயக்கப்படவில்லை.
இந்த நிலையில், கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தி, நோயாளிகளைத் தனிமைப்படுத்தினால் மட்டுமே நோய்ப் பரவலைத் தடுக்க முடியும் என்று உலக அளவில் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்தியாவில் நேற்று 2 லட்சத்து 41,230 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டது. இது வரை மொத்தம் ஒரு கோடியே 2 லட்சத்து 11092 பரிசோதனைகள் செய்யப்பட்டிருக்கிறது.இந்தியாவின் மக்கள்தொகை 135 கோடியாக உள்ள நிலையில், பரிசோதனை விகிதம் 0.8 சதவீதமாகவே உள்ளது. அதே சமயம், இந்த விகிதம் மற்ற நாடுகளில் அதிகமாக உள்ளது. ரஷ்யாவில் அந்நாட்டு மக்கள் தொகையில் 16 சதவீதம், அமெரிக்காவில் 11 சதவீதம், இங்கிலாந்து 15 சதவீதம், பிரேசில் 1.5 சதவீதம், சீனாவில் 6 சதவீதம் என்ற அளவில் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆக.15க்குள் குறைந்தது 5 கோடி பரிசோதனைகளையாவது செய்ய வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.