டிக்டாக் உள்பட சீன ஆப்ஸ்களுக்கு அமெரிக்காவும் தடை..

டிக்டாக் உள்படச் சீன மொபைல் ஆப்ஸ்களுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.லடாக்கின் கல்வான் பகுதியில் எல்லைக்கோடு அருகே சீன ராணுவத்தினர் ஜூன் 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கர்னல் சந்தோஷ் பாபு, தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதன்பின், இரு நாட்டு ராணுவப் படைகளும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே குவிக்கப்பட்டன. இதனால், எல்லையில் பதற்றம் நீடித்து வந்தது.

இதற்கிடையே, இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் ஜூன் 22ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுமுக உடன்பாடு எட்டப்படா விட்டாலும், எல்லையில் மோதலை தவிர்ப்பது என்றும், இரு நாட்டுப் படைகளும் பிரச்சனைக்குரிய கல்வான் பகுதியில் இருந்து விலகிச் செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.ஆனால், சீனா அந்த பகுதிக்குள் மீண்டும் நுழைந்து கூடாரங்களை அமைத்து சில பணிகளைத் தொடங்கியது. சீனாவின் இந்த அடாவடிகளைத் தொடர்ந்து, பிரதமர் மோடி ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார். சீனா கம்பெனிகளின் முதலீட்டில் செயல்படும் டிக்டாக், ஷேர் இட் உள்பட 59 மொபைல் ஆப்ஸ்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதனால், சீன நிறுவனங்களுக்குப் பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர், சீனப்படைகள் கல்வானில் போட்டிருந்த கூடாரங்களை அகற்றி 2 கி.மீ. பின்னோக்கிச் சென்றன.

இதற்கிடையே, அமெரிக்காவும் சீனாவுடன் மோதி வருகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் அமெரிக்காவில்தான் மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனா திட்டமிட்டே இந்த வைரஸ் பாதிப்பை மறைத்து உலக நாடுகளைப் பழிவாங்கியுள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில், அமெரிக்காவும் இந்தியாவைப் பின்பற்றி, சீனாவின் மொபைல் ஆப்ஸ்களுக்கு தடை விதிப்பது பற்றி யோசித்து வருகிறது. இது குறித்து, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறுகையில், டிக்டாக் உள்படச் சீனக் கம்பெனிகளின் மொபைல் ஆப்ஸ்களுக்கு அமெரிக்காவில் தடை விதிப்பது குறித்து அமெரிக்க அரசு ஆலோசித்து வருகிறது என்றார்.

More News >>