மதுரையில் வேகமெடுக்கும் கொரோனா பரவல்.. சென்னையில் குறைகிறது..

மதுரையில் நேற்று ஒரே நாளில் 334 பேருக்கு கொரோனா பரவிய நிலையில், அந்த மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4674 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று புதிதாக 3616 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 65 பேரும் அடக்கம். தற்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 18,594 ஆக அதிகரித்துள்ளது. இதில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 4545 பேரையும் சேர்த்து மொத்தம் 71,116 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு நேற்று 65 பேர் உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 1636 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று மட்டும் 35,427 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தத்தில் இது வரையில் சுமார் 14 லட்சம் பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் கடந்த வாரத்தில் தினமும் சுமார் 2000 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டு வந்தது. கடந்த 4 நாட்களாக அது குறைந்துள்ளது. நேற்று 1203 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 71230 ஆக அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டில் நேற்று 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அந்த மாவட்டத்தில் மொத்தம் 6942 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. திருவள்ளூரில் நேற்று 217 பேருக்கு கொரேனா கண்டறியப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 5205 ஆக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரத்தில் 105 பேருக்குக் கண்டறியப்பட்ட நிலையில், அங்குப் பாதிப்பு எண்ணிக்கை 2836 ஆக அதிகரித்திருக்கிறது. மதுரையில் நேற்று 334 பேருக்கு கொரோனா பரவிய நிலையில், அந்த மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4674 ஆக அதிகரித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் மதுரையைத் தாண்டி சுற்றியுள்ள கிராமங்களிலும் கொரோனா பரவியிருக்கிறது. தற்போது மதுரை மாவட்டத்தில்தான் அரசு தீவிர கண்காணிப்பைத் தொடங்கியுள்ளது. எனினும், கொரோனா மருத்துவமனைகளில் டாக்டர்கள், செவிலியர்கள் சரியாக பணிக்கு வருவதில்லை என்றும், உணவு வழங்குவதிலும் குறைபாடுகள் உள்ளதாகவும் ஆஸ்டின்பட்டி கொரோனா சிகிச்சை மையத்தில் உள்ளவர்கள் கூறியுள்ளனர்.தற்போது மதுரையில் பல இடங்களில் மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பரவலில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அடுத்து 4வது இடத்திற்கு வந்துள்ளது.

More News >>