மக்களுக்கு சுயமரியாதையைப் பெற்றுக் கொடுத்தவர் பெரியார் - சித்தராமையா

சமூக சீர்த்திருத்தத்திற்காகப் போராடிய பெரியாரைப் பார்த்து பாஜக பயப்படுவது ஏன்? என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும், சிலை அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதைப் போல, தமிழகத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்று பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா கூறிய கருத்து, தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்புக்குப் பின்னர், எச்.ராஜா தனது கருத்தை திரும்பப் பெற்றார். ஆயினும், அவருக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில் ஓர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக-வினர் பெரியார் சிலையை சேதப்படுத்தியதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்” என்றும், “புரட்சிகர சமூக சீர்திருத்தவாதியான ஈ.வெ.ரா. பெரியாரை பார்த்து பாஜக ஏன் பயப்படுகிறது?”என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “சாதி அடக்குமுறையால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சுயமரியாதையைப் பெற்றுக் கொடுத்தவர் பெரியார், அப்படிப்பட்ட தலைவரது சிலையைத் தாக்கியதிலிருந்தே பாஜக-வின் ஏற்றத்தாழ்வு கொள்கையை மக்கள் அறிந்து கொள்ளலாம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

More News >>