மதுரையில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரமானது.. சென்னையில் தொற்று குறைகிறது..
மதுரையில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 379 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, நோய் பாதித்தவர் எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்ந்தது.சீன வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் 7 லட்சம் பேருக்கு மேல் நோய் பரவியிருக்கிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தினமும் 4 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பரவி வந்தது. தற்போது அதன் பரவும் வேகம் சற்று குறைந்திருக்கிறது.
தமிழகம் முழுவதும் நேற்று 3756 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 63 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள். நேற்று மாலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 22,350 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில், நேற்று டிஸ்சார்ஜ் ஆன 3051 பேரையும் சேர்த்தால், இது வரை 74,167 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று பலியான 64 பேரையும் சேர்த்தால் 1700 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இது வரை தமிழகத்தில் 14 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 34,962 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை அரசு வெளியிடவில்லை. சென்னையில் தினமும் புதிதாக 3, 4 ஆயிரம் பேர் வரை நோய்த் தொற்று கண்டறியப்பட்டு வந்த நிலையில், நேற்று இது 1261 ஆகக் குறைந்துள்ளது. சென்னையில் தற்போது வரை மொத்தம் 72,500 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது.
செங்கல்பட்டில் நேற்று 273 பேருக்கும், திருவள்ளூரில் 300 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டது. இந்த மாவட்டங்களில் நோய்ப் பாதிப்பு 5 ஆயிரத்தை ஏற்கனவே தாண்டி விட்டது. இந்நிலையில் மதுரையில் நேற்று நோய்ப் பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட 379 பேரையும் சேர்த்து மொத்தம் 5057 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. இந்த மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக, திருவண்ணாமலை, வேலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களிலும் அதிகமானோருக்கு நோய் பரவியிருக்கிறது.