உ.பி.யில் போலீஸ் என்கவுன்டரில் 2 ரவுடிகள் கொலை.. தாதா விகாஸ் துபேவுக்கு வலை..

உ.பி.யில் போலீசாரை சுட்டுக் கொன்ற பிரபல ரவுடி விகாஸ் துபேயின் கூட்டாளிகள் மேலும் 2 பேர் போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர்.உத்தரப்பிரதேசத்தில் போலீசார் தேடி வந்த பிரபல தாதா விகாஸ் துபே, கான்பூர் அருகே பிகாரு என்ற கிராமத்தில் பதுங்கியிருக்கும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. கடந்த வாரத்தில் ஒரு நாள் அதிகாலையில், போலீசார் பெரும்படையுடன் அந்த கிராமத்திற்குள் நுழைந்தனர். அந்த ரவுடி பதுங்கியிருந்த வீட்டுக்குச் செல்லும் வழியை அடைத்து பாறாங்கற்களைப் போட்டு வைத்திருந்தனர். அந்த கும்மிருட்டிலும் போலீசார் அவற்றை அகற்றி விட்டு, போலீஸ் ஜீப்களில் அந்த வீட்டை நெருங்கியுள்ளனர். அப்போது வீட்டிலிருந்த ரவுடி துபே மற்றும் கூட்டாளிகள் உஷாராகி, போலீசார் மீது துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். போலீசாரும் பதிலுக்குச் சுட்டனர்.

ஆனால், இதில் டி.எஸ்.பி. தேவேந்திர குமார் மிஸ்ரா உள்பட 8 போலீசார் அந்த இடத்திலேயே பலியாகி விட்டனர். மேலும் 4 போலீசார் காயமடைந்தனர். இதில் போலீஸ் படை நிலைகுலைந்தது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, துபே மற்றும் கூட்டாளிகள் தப்பியோடி விட்டனர். இதைத் தொடர்ந்து, போலீசார் மாநிலம் முழுவதும் தீவிர வேட்டை நடத்தினர். மேலும், ரவுடி விகாஸ் துபேவுக்கு போலீஸ் வருவதைத் துப்பு கொடுத்ததாக 2 சப்இன்ஸ்பெக்டர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், விகாஸ் துபேயின் 3 கூட்டாளிகளை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.

இந்நிலையில், நேற்று(ஜூன்8) துபேயின் கூட்டாளி பிரவீன் துபேவை போலீசார் சுற்றி வளைத்தனர். அவனை போலீஸ் ஜீப்பில் கொண்டு வந்த போது, அவன் எட்டாவா என்ற இடத்தில் போலீசாரை தாக்கி விட்டுத் தப்பியோட முயன்றான். அப்போது போலீசார் அவனைச் சுட்டுக் கொன்றனர்.இதைத் தொடர்ந்து, இன்று அதிகாலையில் அரியானா மாநிலம் பரிதாபத்தில் பதுங்கியிருந்த இன்னொரு கூட்டாளி பிரபாத் மிஸ்ராவை போலீசார் பிடித்தனர். அவனைப் பலத்த பாதுகாப்புடன் கான்பூருக்கு ஜீப்பில் கொண்டு சென்றனர். பங்கி என்ற இடத்தில் ஜீப் டயர் பஞ்சரானதால், அவனை வேறொரு வாகனத்திற்கு மாற்றினர். அப்போது பிரபாத் மிஸ்ரா திடீரென போலீசாரின் துப்பாக்கியைப் பறித்து அவர்களைச் சுட்டு விட்டுத் தப்ப முயன்றான். இதனால், அவனை போலீசார் சரமாரியாகச் சுட்டுத் தள்ளினர். இதில் அவன் இறந்தான். இவனையும் சேர்த்து விகாஸ் துபேயின் கூட்டாளிகள் 5 பேர் வரை போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளனர்.

More News >>