பாஜகவை தோற்கடிக்க வேறு கட்சிக்கு ஓட்டு கேட்கும் மாயாவதி!
2 தொகுதிகளிலும் பாஜக தோற்க வேண்டுமானால் சமாஜ்வாதி கட்சிக்கு தயங்காமல் வாக்கு கேளுங்கள் என்று பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில், எதிர்க்கட்சிகள் தனித்தனியாக பிரிந்து நின்றதால், கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக எளிதாக வெற்றி பெற்றது. மாநில முதல்வராக சாமியார் ஆதித்யநாத் பொறுப் பேற்றார்.
அவர் ஏற்கனவே கோரக்பூர் தொகுதி எம்.பி.யாக இருந்ததால், முதல்வர் பதவிக்காக எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல, அம்மாநிலத்தின் துணை முதல்வர்களில் ஒருவரான கேசவ் பிரசாத் மவுரியாவும் தனது பல்பூர் தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால், காலியான இந்த இரண்டு தொகுதிகளுக்கும் மார்ச் 11-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. பாஜக-வும் காங்கிரஸூம் தனித்துப் போட்டியிடும் நிலையில், திடீர் திருப்பமாக, இந்த தொகுதிகளில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு ஆதர வளிப்பதாக, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்தார்.
இதனையடுத்து, இரண்டு மக்களவை தொகுதிகளில் பாஜக தோற்கடிக்கப்படுவதற்கு, சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவாக தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபடுமாறு, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, தனது தொண்டர்களிடத்தில் வலியுறுத்தி வருகிறார்.
இது குறித்து கூறியுள்ள அவர், “வீட்டுக்கு வீடு சென்று சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என மக்களிடம் சொல்லுங்கள்” என்று கூறியுள்ளார்.