உ.பி. பிரபல ரவுடி விகாஸ் துபே கைது.. ம.பி.யில் சுற்றி வளைப்பு..

உத்தரப்பிரதேசத்தில் 8 போலீசாரை சுட்டுக் கொன்ற பிரபல ரவுடி விகாஸ் துபேவை, மத்தியப் பிரதேசத்தில் அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.உத்தரப்பிரதேசத்தில் போலீசார் தேடி வந்த பிரபல தாதா விகாஸ் துபே, கான்பூர் அருகே பிகாரு என்ற கிராமத்தில் பதுங்கியிருக்கும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. கடந்த வாரத்தில் ஒரு நாள் அதிகாலையில், போலீசார் பெரும்படையுடன் அந்த கிராமத்திற்குள் நுழைந்தனர். அப்போது ரவுடி துபே மற்றும் கூட்டாளிகள் உஷாராகி, போலீசார் மீது துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இதில் டி.எஸ்.பி. தேவேந்திரகுமார் மிஸ்ரா உள்பட 8 போலீசார் அந்த இடத்திலேயே பலியாகி விட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாகத் தாதா விகாஷ் துபேவின் கூட்டாளிகள் பிரபாத் மிஸ்ரா, பிரவீன் துபே உள்பட 5 பேர் போலீசாரின் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே, மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜையினில் பதுங்கியிருந்தான். அவரை சந்தேகத்தின் பேரில் ம.பி. போலீசார் கைது செய்தனர். அப்போது அவன், நான் யார் தெரியுமா? நான்தான் விகாஸ் துபே என்று போலீசாரை மிரட்டும் வகையில் சத்தம் போட்டுள்ளான். ஆனாலும், போலீசார் அவனை மண்டையில் தட்டி கைது செய்து அழைத்துச் சென்றனர்.விகாஸ் துபே கைது செய்யப்பட்ட தகவலை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம், ம.பி. முதல்வர் சிவராஜ்சவுகான் தெரிவித்தார். இதையடுத்து, பிரபல ரவுடி விகாஸ் துபேவை, உ.பி.க்கு போலீசார் அழைத்துச் செல்கின்றனர்.

More News >>