கொரோனா தடுப்பு பணி.. முதலமைச்சருடன் மத்தியக் குழுவினர் ஆலோசனை..

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சருடன் மத்தியக் குழு ஆலோசனை நடத்தியது. இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது. ஒன்றே கால் லட்சம் பேருக்கு மேல் நோய் பாதித்திருக்க 1765 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுப்பதற்கு மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்கு, மத்திய அரசு ஒரு குழுவை அனுப்பியுள்ளது.ஏற்கனவே 2 முறை தமிழகத்தில் ஆய்வு செய்த இந்த குழு 3வது முறையாகச் சென்னை வந்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையில் 7 பேர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

சென்னையில் மாநில சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நோய்த் தடுப்பு பணிகள் மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, கிண்டியில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனை, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், டி.எம்.எஸ் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.பின்னர், தலைமைச் செயலாளர் சண்முகத்தைச் சந்தித்து, நோய்த் தொற்றின் நிலை, கட்டுப்பாடுகள், அரசு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, தொற்று அதிகமாகிப் பரவியுள்ள மதுரை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம், சேலம், தேனி, ராணிப்பேட்டை, விருதுநகர் ஆகிய 11 மாவட்டக் கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாகத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்தனர்.பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று காலையில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

More News >>