காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா காந்தி ஆலோசனை..
காங்கிரஸ் லோக்சபா எம்.பி.க்களுடன் சோனியாகாந்தி இன்று ஆலோசனை நடத்தினார். அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ஏற்கனவே பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். கொரோனா பரவல், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மோசமான நிலை, மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய சோனியா காந்தி, கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசுக்குப் பல ஆலோசனைகளைக் கூறினார்.
பிரதமர் மோடிக்கு நேரடியாகக் கடிதங்களையும் எழுதினார். கடைசியாக, மருத்துவக் கல்லூரிகளில் மத்திய அரசின் கோட்டாவில் இட ஒதுக்கீடு பின்பற்றாததால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 11 ஆயிரம் இடங்கள் பறிபோனதாகச் சுட்டிக் காட்டி கடிதம் அனுப்பியிருந்தார்.இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் லோக்சபா எம்.பி.க்களுடன் சோனியாகாந்தி இன்று காலையில் வீடியோ கான்பரன்சில் ஆலோசனை நடத்தினார். மாநிலங்களில் கொரோனா பரவல் மற்றும் தடுப்பு பணிகள், மத்திய அரசின் நிவாரணப் பணிகள், பொருளாதார சுணக்கம் மற்றும் பல விஷயங்கள் குறித்து அவர் கேட்டறிந்தார். கொரோனா மற்றும் பொருளாதார பின்னடைவால் துன்பப்படும் மக்களுக்குக் காங்கிரஸ் எம்.பி.க்கள் உதவ வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.