சிங்கப்பூர் தேர்தலில் வெற்றி.. பிரதமர் லீ செய்னுக்கு நரேந்திர மோடி வாழ்த்து..

சிங்கப்பூர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள அந்நாட்டுப் பிரதமர் லீ செய்ன் லூங்கிற்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லுாங் தலைமையிலான மக்கள் செயல் கட்சியின்(பீப்பிள் ஆக்சன் கட்சி) ஆட்சி நடக்கிறது. கடந்த 1965ம் ஆண்டு முதல் இந்த கட்சிதான் ஆட்சியில் இருக்கிறது. பிரதமர் லீ செய்ன் லூங் தற்போதைய ஆட்சிக்காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் இருக்கிறது. எனினும், பிரதமர் லீ, தேர்தலை முன்கூட்டியே நடத்தினார்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு இடையே சிங்கப்பூரில் நேற்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில், ஆளும் மக்கள் செயல் கட்சி(பிஏபி) கட்சி 83 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. எனினும், இந்த கட்சியின் வாக்கு சதவீதம் 70ல் இருந்து 63 ஆகக் குறைந்திருக்கிறது. எதிர்க்கட்சியான தொழிலாளர்கள் கட்சி 10 இடங்களைக் கைப்பற்றியது. கடந்த முறை 6 இடங்களைக் கைப்பற்றியிருந்த நிலையில், இம்முறை கூடுதலாக 4 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது.

இந்நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிங்கப்பூர் பிரதமர் லீ செய்ன் லூங்கிற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதில், சிங்கப்பூர் பிரதமர் லீ செயின் லூங் வெற்றிக்குப் பாராட்டுகள். சிங்கப்பூர் மக்கள் அமைதியான, வளமான எதிர்காலத்தைப் பெறுவதற்கு வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார்.

More News >>