கட்சி தாவும் சச்சின்பைலட்.. ராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சி கவிழ்கிறது..

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்வது உறுதியாகி விட்டது. பாஜக திட்டமிட்டபடி, கர்நாடகா, ம.பி.யைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் விரைவில் பாஜக ஆட்சி ஏற்படலாம்.ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. துணை முதலமைச்சராக சச்சின் பைலட் உள்ளார். சச்சின் பைலட்டை முதலமைச்சராக்க வேண்டுமென்று அவரது ஆதரவாளர்கள் காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர்.

இந்நிலையில், கர்நாடகாவைப் போல் ராஜஸ்தானிலும் ஆளும் காங்கிரசில் இருந்து பல எம்.எல்.ஏ.க்கள் விலகி வருவார்கள் என்று பாஜக எதிர்க்கட்சித் தலைவர் குலாப்சந்த் கட்டாரியா தெரிவித்திருந்தார். மேலும், ராஜ்யசபா தேர்தலின் போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியையும் பாஜக மேற்கொண்டது. ஆனால், அது பலனளிக்கவில்லை.தற்போது மீண்டும் அசோக் கெலாட் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. இது பற்றி, காங்கிரஸ் அரசின் முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், எனது அரசைக் கவிழ்ப்பதற்காக எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம் பேசி வருகிறது. ஒரு எம்.எல்.ஏ.வுக்கு அட்வான்சாக ரூ.10 கோடியும், ஆட்சியைக் கவிழ்த்த பின்பு ரூ.15 கோடியும் தருவதாகப் பேரம் பேசுகிறார்கள். பாஜக மேலிடத்தின் ஆசியுடன் சதீஷ்புனியாவும், ராஜ்யவர்தன்சிங் ரத்தோரும் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சித்து வருகிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.

மேலும், எம்.எல்.ஏ.க்களிடம் பணப் பேரம் பேசியதாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரிப்பதற்காக முதல்வர் கெலாட் மற்றும் சச்சின் பைலட் உள்ளிட்டோருக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.இதனால், கெலாட் மீது துணை முதல்வர் சச்சின் பைலட் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து அவருடன் பாஜக ரகசியமாகப் பேரம் பேசுவதாகவும், அவருக்கு ஆதரவாக 30 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாகவும் கூறப்பட்டது. சச்சின் பைலட் தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ளார். அவர் இன்று அல்லது நாளை, பாஜக தலைவர் நட்டாவை சந்திக்கலாம் எனப் பேசப்படுகிறது.

இந்நிலையில், கெலாட் ஆட்சியைக் காப்பாற்றும் இறுதிக் கட்ட முயற்சியாக இன்று ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளாத எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதைக் காங்கிரஸ் மேலிடப் பிரதிநிதி அவினாஷ் பாண்டே தெரிவித்தார்.இதற்கிடையே, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று ஜெய்ப்பூருக்கு வந்துள்ளார். அவர் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்று கருத்துக் கேட்பார் எனத் தெரிகிறது. ராஜஸ்தான் சட்டசபையில் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 200. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 107 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜ.க.வுக்கு 72 எம்எல்ஏக்களும் உள்ளனர். மார்க்சிஸ்ட் மற்றும் சுயேச்சைகள் உள்பட 18 எம்.எல்.ஏக்களும் ஆதரவு தருவதால் கெலாட்டுக்கு ஆதரவு 125 ஆக உள்ளது என அரசு தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால், சச்சின் பைலட் ஆதரவு 30 எம்.எல்.ஏ.க்கள் இன்று கட்சி தாவுவார்கள் அல்லது பதவியை ராஜினாமா செய்து கர்நாடகாவைப் போல் பாஜக ஆட்சி அமைய ஒத்துழைப்பார்கள் என்று பாஜக தரப்பில் கூறப்படுகிறது. கர்நாடகா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் ஆட்சியைக் கவிழ்த்து பாஜக ஆட்சியைக் கொண்டு வருவதில் மோடி-அமித்ஷா டீம் இன்னமும் உறுதியாக இருப்பது தற்போதைய நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

More News >>