தமிழகத்தில் கொரோனா பலி 2 ஆயிரம் தாண்டியது.. 1.42 லட்சம் பேருக்கு பாதிப்பு..

தமிழகத்தில் கொரோனா நோய்க்குப் பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியது. சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவில் பரவிக் கொண்டே இருக்கிறது. தமிழகத்திலும் தொடர்ந்து நோய் பரவிக் கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் பரவும் வேகம் சிறிது குறைந்திருந்தாலும் மதுரை உள்பட சில மாவட்டங்களில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று 4370 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 66 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். நேற்று மாலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 42,798 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

இதில், நேற்று டிஸ்சார்ஜ் ஆன 3035 பேரையும் சேர்த்தால், இது வரை 92,567 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று பலியான 66 பேரையும் சேர்த்தால் 2032 பேர் வரை உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 48,196 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இது வரை தமிழகத்தில் 15 லட்சத்து 86 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 43,548 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் அரசு அறிக்கையில் வெளியிடப்படவில்லை.

சென்னையில் நேற்று 1140 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் தற்போது வரை மொத்தம் 78,573 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டில் நேற்று 219 பேருக்கும், திருவள்ளூரில் 337 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டது. இந்த மாவட்டங்களில் நோய்ப் பாதிப்பு 6500ஐ தாண்டி விட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று 352 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இம்மாவட்டத்தில் தொற்று பாதித்தவர் எண்ணிக்கை 3979 ஆக உள்ளது.மதுரையில் நேற்று நோய்ப் பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட 464 பேரையும் சேர்த்து மொத்தம் 6539 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. சேலம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, தூத்துக்குடி, நெல்லை. தேனி, விருதுநகர், திருச்சி போன்ற மாவட்டங்களிலும் நேற்று நூற்றுக்கும் அதிகமானோருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.

More News >>