தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒன்றரை லட்சம்.. பலியும் 2167 ஆக உயர்வு..
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தைத் தாண்டியது. பலியும் 2167 ஆக அதிகரித்துள்ளது.சீன வைரஸ் நோய் கொரோனா, இந்தியாவில் 9 லட்சம் பேருக்கு மேல் பாதித்துள்ளது. அதிகபட்சமாக, மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி மாநிலங்களில் நோய்த் தொற்று பரவியிருக்கிறது.தமிழகம் முழுவதும் நேற்று(ஜூலை15) 4496 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.இதில் 66 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்.நேற்று மாலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 51,820 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில், நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5000 பேரையும் சேர்த்தால், இது வரை ஒரு லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று பலியான 68 பேரையும் சேர்த்தால் 2167 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இது வரை தமிழகத்தில் 16 லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 39,715 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் அரசு அறிக்கையில் வெளியிடப்படவில்லை. சென்னையில் கொரோனா பரவும் வேகம் குறைந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு தினமும் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வந்தது. பின்னர், இது படிப்படியாகக் குறைந்து வருகிறது. நேற்று 1291 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.சென்னையில் இது வரை மொத்தம் 80,961 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது.
செங்கல்பட்டில் நேற்று 186 பேருக்கும், காஞ்சிபுரம் 163, மதுரை 341, திருவள்ளூர் 278, கோவை 103, திண்டுக்கல் 113, கன்னியாகுமரி 134, சிவகங்கை 100, விருதுநகர் 175, நெல்லை 164, ராமநாதபுரம் 118, கன்னியாகுமரி 134, திண்டுக்கல் 113 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. மதுரையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 7331 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூரிலும் பாதிப்பு எண்ணிக்கை 7573 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 20 மாவட்டங்களில் 2 ஆயிரம் பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதனால், சென்னை தவிரப் பிற மாவட்டங்களில் நோய்த் தடுப்பு பணிகளைத் துரிதப்படுத்தாவிட்டால், நோய்ப் பாதிப்பில் மகாராஷ்டிராவை முந்தி தமிழகம் முதலிடத்திற்கு வந்து விடும்.